05/06/2023 (823)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
போட்டு வாங்குவதுன்னு கேட்டு இருப்பீங்க. நாம் ஒன்று சொல்ல அடுத்தவர் ஒன்பது சொல்லுவார்!
கை இறைப்பான் (கை பம்பு, அடி பம்பு, Hand Pump) நாம் பயன்படுத்தியிருப்போம். இல்லையென்றால் பார்த்தாவது இருப்போம். அதனை இயக்குவதற்கு முன்னால், அதனுள் நாம் கொஞ்சம் நீரினை ஊற்றி அடிக்க வேண்டும். அப்போதுதான், அது கிழே உள்ள நீரினை உறிஞ்சி வெளியே கொண்டுவரும்.
அதைப்போல, கற்றறிந்த ஒத்தவர்கள் அவையிலோ, மெத்தவர்கள் அவையிலோ நீங்கள் கேள்விகளையோ அல்லது உங்கள் கருத்துகளையோ முன் வைப்பீர்கள் என்றால், அதனை ஒட்டியும், வெட்டியும் பல கருத்துகள் கிடைக்கும். அதைக் கவனமாகக் கேட்க வேண்டும். எல்லா நூல்களையும் நாம் ஒருவரே கற்க இயலாது! கருத்துப் பரிமாற்றம் நிகழும்போது நாம் கேட்டாவது அறியலாம்.
கேள்வி அதிகாரத்தில், நல்ல பல அரிய கருத்துகளைக் காது கொடுத்து கேட்பது நல்லது என்றார். காண்க 02/11/2021 (252). மீள்பார்வைக்காக:
“கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.” --- குறள் 414; அதிகாரம் – கேள்வி
அவையஞ்சாமையில் அமைந்துள்ள நான்காவது குறளில் மேலும் விரிக்கிறார்.
கற்றவர்கள் அவையில் பயமில்லாமல் பேசுங்கள். அதனால், பயனுண்டு என்கிறார்.
“கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.” --- குறள் 724; அதிகாரம் – அவையஞ்சாமை
கற்றார்முன் கற்ற செலச் சொல்லி = கற்றவர்கள் அவைகளில் நாம் கற்றவற்றை அவர்கள் விரும்பிக் கேட்குமாறு சொல்லி; தாம் கற்றமிக்காருள் மிக்க கொளல் = தம்மைவிட கற்றவர்களிடமிருந்து, அவர்கள் சொல்லும் அதிகப்படியான கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
கற்றவர்கள் அவைகளில் நாம் கற்றவற்றை அவர்கள் விரும்பிக் கேட்குமாறு சொல்லித் தம்மைவிட கற்றவர்களிடமிருந்து, அவர்கள் சொல்லும் அதிகப்படியான கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
பயத்தினாலோ, அல்லது செருக்கினாலோ நாம் நமது கருத்தினை முன் வைக்கவில்லை என்றால் நாம் கிணற்றுத் தவளையாகவே இருக்க வேண்டியதுதானாம்! பழமொழி நானூறில் அப்படித்தான் சொல்கிறார்கள்.
உணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்
கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்–கணக்கினை
முற்றப் பகலும் முனியா தினிதோதிக்
கற்றலின் கேட்டலே நன்று. – பாடல் 61; - பழமொழி நானூறு
கணக்கு = நூல்கள்; உணற்கினிய இன்நீர் பிறிதுழியில் என்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் = குடிப்பதற்குரிய இனிமையான நீர் வேறு எங்கும் இல்லை என்று கிணற்றில் இருக்கும் தவளை போல இருக்க மாட்டார்; கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிதோதிக் கற்றலின் கேட்டலே நன்று = நல்ல பல நூல்களை இரவும் பகலும் சோர்வில்லாமல் நாமே முட்டி மோதிக் கற்பதைவிட நன்கு அறிந்தவர்கள் அகப்பட்டால், அவர்களிடம் நம் கருத்துகளைச் சொல்லி, அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் கேட்பர். அது மிகவும் நன்மையைப் பயக்கும்.
குடிப்பதற்குரிய இனிமையான நீர் வேறு எங்கும் இல்லை என்று கிணற்றில் இருக்கும் தவளைப் போல இருக்க மாட்டார். நல்ல பல நூல்களை இரவும் பகலும் சோர்வில்லாமல் நாமே முட்டி மோதி கற்பதைவிட நன்கு அறிந்தவர்கள் அகப்பட்டால், அவர்களிடம் நமது கருத்துகளைச் சொல்லி அவர்கள் சொல்லும் விளக்கங்களைக் கேட்பர். அது மிகவும் நன்மையைப் பயக்கும்.
ஆக, காது கொடுத்து கேட்பது நன்று. அதனினும் நன்று, அவையஞ்சாமல் பேசுவது. அதனினும் நன்று, நாம் பேசியபின், அறிவில் சிறந்தோர் சொல்வதைக் கேட்பது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments