top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கற்றாருள் கற்றார் ... 722, 712

02/06/2023 (820)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

குறள் 721 இல், பயந்து பிழையானக் கருத்துகளை சொல்லத் தேவையில்லை என்றவர் மேலும் தொடர்கிறார்.

அவையறிதலையும் அவையஞ்சாமையையும் இணைத்துப் பார்ப்பது பயன் அளிக்கும்.

அவையறிதல் அதிகாரத்தில் இரண்டாம் குறளில் ‘இடை தெரிந்து நன்குணர்ந்து சொல்லுக’ என்றார். அவையில் நாம் சொல்லும் கருத்துகளைக் கேட்பவர்கள் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும் என்றார். காண்க 22/05/2023 (809). மீள்பார்வைக்காக:

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர்.” --- குறள் 712; அதிகாரம் – அவையறிதல்


சொல்லின் நடை என்பது மூன்று வகைச் சொல்களின் பொருள்களை (செம்பொருள், இலக்கணப் பொருள், குறிப்புப் பொருள்) ஆராய்ந்தறிந்து அதனின் நன்மையை அறிந்தவர், அவையினர் விருப்பமுடன் கேட்கும் வகையில் குற்றமில்லாமல் (சொற் குற்றம், பொருட் குற்றம்) சொல்லுக.


அவையஞ்சாமையில் நம்மை மிக்காராக்க முயல்கிறார். என்ன சொல்கிறார் என்றால் கற்றவர்களுள் கற்றவர் என்பவர்கள், கற்றவர்கள் முன் தான் கற்றவற்றை அவர்கள் ஏற்கும் விதத்தில் சொல்பவர்கள்தாம் என்கிறார்.


இதுதான், கற்பதற்கும், நன்றாக கற்பதற்கும் உள்ள வேறுபாடு. நாம் கற்பதை கற்றவர்களும் ஏற்குமாறு சொல்வதுதான் நன்றாகக் கற்பது!


கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.” --- குறள் 722; அதிகாரம் – அவையஞ்சாமை


கற்றாருள் கற்றார் எனப்படுவர் = கற்றவர்கள் எல்லாரினும் இவர் மிக நன்கு கற்றவர் என உலகத்தால் பாராட்டப்படுபவர்கள் (யார் என்றால்); கற்றார்முன்கற்ற செலச் சொல்லுவார் = கற்றவர்களின் அவையின் முன் தாம் கற்றதை அவர்கள் ஏற்கும் விதமாகச் சொல்பவர்கள்தான்.


கற்றவர்கள் எல்லாரினும் இவர் மிக நன்கு கற்றவர் என உலகத்தால் பாராட்டப்படுபவர்கள் யார் என்றால்,கற்றவர்களின் அவையின் முன் தாம் கற்றதை அவர்கள் ஏற்கும் விதமாகச் சொல்பவர்கள்தான்.

அவர்களை உலகம் அறியும் வாய்ப்பு இருப்பதால், அவர்கள் மிக்காரகவும் கருதப்படுவர். அதற்குத் தேவை அவையஞ்சாமை.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page