02/11/2021 (252)
ஞான நிலையின் நான்கு படிகள் காண்டல், செப்பல், கேட்டல், சிந்தித்தல்…
என்று திருமூலத் தெய்வம் சொன்னதைப் பார்த்தோம். குருவருள் இருக்க வேண்டும் என்பதை அழுத்திக் கூறினார் திருமூலப் பெருமான்.
திருக்குறளில் குரு என்பதைப் பற்றியோ ஆசிரியர் என்பவரைப் பற்றியோ தனியொரு அதிகாரம் இல்லை என்பது ஒரு ஆச்சரியமான செய்திதான்.
எந்த ஒன்றையும் காட்டிவிட்டால் சரிவராது என்று நினைத்திருப்பாரோ?
இருக்கலாம்.
நாம ஏற்கனவே பொருட்பாலில் உள்ள அரசியலின் அதிகார முறைமையைப் பார்த்தோம். அதாவது, முப்பத்தொராவது அதிகாரத்தில் இருந்து ‘அரசியலில்’ ஒரு தலைவனின் இலக்கணங்களை வரிசைப்படுத்துகிறார். தலைவனின் சிறப்பினை இறைமாட்சி (39) யில் தொடங்கி, கல்வி (40), கல்லாமை (41), கேள்வி (42), அறிவுடைமை (43), குற்றங்கடிதல் (44) என்று கூறிக்கொண்டே வந்த பேராசான் அடுத்து நாற்பத்தி ஐந்தாவது அதிகாரமாக பெரியாரைத்துணைக்கோடல் (45) என்று அமைக்கிறார்.
கல்வி, கேள்வி, பெரியாரைத் துணைக் கோடல் இப்படி வழி நெடுகிலும் ஆசிரியர்கள் இருப்பார்கள். அந்த வழியிலே வரும் போது நமக்கான குரு வெளிப்படுவார்.
ஒரு முக்கியமான குறள் இருக்கு. அதாவது, நாமே முயன்று கற்கலைன்னா கூட பரவாயில்லை. அறிவில் செறிந்தவர்கள் சொல்லும் போது கேட்கனுமாம். அது எப்படி உதவும் என்றால் நாம தளர்ச்சியுறும் போது அது ஒரு ஊன்று கோல் போல இருக்குமாம். அதைப் பிடித்துக் கொண்டு முன்னேறிடலாமாம். இது தான் குரு.
ஒரு சொலவடை இருக்கு இல்லையா, “சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை” என்று அதைப் போல, நாம முயலனும், முடியலைன்னா தெரிந்தவர்கள் சொல்வதையாவது கேட்கனும்.
“கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.” --- குறள் 414; அதிகாரம் – கேள்வி
கற்றிலன் ஆயினும் கேட்க = உறுதிப் பொருட்களை உணர்த்தும் நூல்களைக் கற்கவில்லை என்றாலும் அதனை நன்கு கற்று அறிந்தவர்கள் சொல்லும் போது கேட்கவும்; அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை = அது ஒருவருக்கு தளர்வு வரும் போது ஊன்று கோல் போலத் துணை செய்யும்; ஒற்கம் = தளர்ச்சி; ஊற்றாம் = ஊற்று + ஆம் – இங்கே ஊன்று என்பது ஊற்று என்று திரிந்துள்ளது.
குருவைக் காண காதை திறந்து வைக்கனும்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários