25/04/2024 (1146)
அன்பிற்கினியவர்களுக்கு:
அறிவுடையார் கல்லாதான் ஒட்பத்தினை அறிவென்று ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றார் குறள் 404 இல். காண்க 24/04/2024.
கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின் கல்லாதவரும் சிறந்தவர் என்றார் கூறள் 403 இல். காண்க 09/02/2021.
சரி, அப்படி இல்லாமல் கற்றார் முன் கல்லா ஒருவர் தன் சுய சிந்தனைகளை வலிய எடுத்து வைக்க முயன்றால் என்ன ஆகும்?
அவருக்கு, அதுவரை, இருந்த மரியாதையும் குறைவுபடும்.
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். – 405; - கல்லாமை
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாட = கற்றார் முன் கல்லா ஒருவர் தன் சுய சிந்தனைகளை வலிய எடுத்து வைக்க முயன்றால்; சோர்வு படும் = அதுவரை அவருக்கு இருந்த மரியாதையும் குறைவுபடும்.
கற்றார் முன் கல்லா ஒருவர் தன் சுய சிந்தனைகளை வலிய எடுத்து வைக்க முயன்றால், அதுவரை, அவருக்கு இருந்த மரியாதையும் குறைவுபடும்.
கல்லா ஒருவர் கற்றவர்களுடன் பேச முற்படும்போது “தலைப்பெய்து” என்று பயன்படுத்திய நம் பேராசான், கற்றவர்களுடன் கற்றவர்கள் உரையாடும்போது “தலைக்கூடி” என்று பயன்படுத்துகிறார். காண்க 03/11/2021.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - 394; - கல்வி
“தலைப்பெய்து” என்றால் “இயற்கைக்கு மாறாக சேருதல்” என்றும் “தலைக்கூடி” என்றால் “இயல்பாய் இணைவது” என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்.
“தலைப்பெய்து” பயன்பாட்டைக் கம்பர் பெருமான் பாடலில்:
தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ,
ஒய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்;
ஆய சேனையும், அணங்கனார்களும்,
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார். – பாடல் 2465; கம்பராமாயணம்
அந்த ஊரில் இருந்த தாய்மார்கள் இணைந்து தம் மகன் அல்லாத இராமனைத் தம் மகன் போலவே தழுவி துக்கத்தோடு கதறுகிறார்கள் என்கிறார் கம்பர் பெருமான்.
இது நிற்க.
களர் நிலத்திற்கு ஒப்பானவர் கல்லாதவர் என்றார் குறள் 406 இல். காண்க 18/04/2023.
மண்ணால் செய்யப்பட்ட பெண்ணின் சிலை எவ்வளவு நேர்த்தியாக இருப்பினும் இல்லறத்திற்கு உதவாது. அதுபோல கல்லாதவரால் மனித குலத்திற்குப் பயன் ஏதும் இல்லை என்றார் குறள் 407 இல். காண்க 27/05/2023.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments