15/08/2023 (893)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நமக்கு எல்லாம் தெரிந்தமாதிரி செயல்படும்போது இடறிவிழ வாய்ப்புகள் ஏராளம். அதைக் காணும் இந்த உலகம் நம்மை அடையாளம் கண்டுகொண்டு ஒதுங்கிவிடும்.
பிறகு நமக்கு நன்றாகத் தெரிந்தச் செயல் ஒன்றிரண்டு இருக்கும் அல்லவா அதனைச் செய்யும்போதும் இந்த உலகம் நம்மைச் சந்தேகக் கண்ணோடே பார்க்கும்.
ஆகையினால் சற்றே கவனத்துடன் இருக்க வேண்டும். கவனத்துடன் இல்லை என்றால் நாமும் திரு. புல்லறிவாளர்தாம் என்கிறார்.
“கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.” --- குறள் 845; அதிகாரம் – புல்லறிவாண்மை
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் =சரிவரக் கற்றுக் கொள்ளாமல் ஒரு செயலைச் செய்ய முயல்வேன் என்பது சரியல்ல. அவ்வாறு முயன்றால் அறியாமைதான் வெளிப்படும்; கசடற வல்லதூஉம் ஐயம் தரும் = (அதனால் என்ன ஆகும் என்றால்) நன்றாக அறிந்த ஒரு செயலினைச் செய்யும் போதும் இந்த உலகம் ஐயம் கொள்ளுமே தவிர நம்பாது.
சரிவரக் கற்றுக் கொள்ளாமல் ஒரு செயலைச் செய்ய முயல்வேன் என்பது சரியல்ல. அவ்வாறு முயன்றால் அறியாமைதான் வெளிப்படும். அதனால் என்ன ஆகும் என்றால் நன்றாக அறிந்த ஒரு செயலினைச் செய்யும் போதும் இந்த உலகம் ஐயம் கொள்ளுமே தவிர நம்பாது.
இதனை ஆங்கிலத்தில் Trust deficit என்பார்கள். அஃதாவது நம்பிக்கையின்மை. நம்மிடம் இந்த உலகத்திற்கு நம்பிக்கையின்மைத் தோன்றிவிட்டால் நம்மால் எந்தச் செயலும் இயல்பாகச் செய்ய இயலாது.
நம்ம்பிக்கைதான் அனைத்தும். முதலில் நம் மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து பிறர் நம் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.
நம்பிக்கையானது சின்னச் சின்னச் செயல்களின் மூலம் உருவாகும். இது ஒரு தொடர் நிகழ்வு. நம்பிக்கை நல்லதோர் அழகான கண்ணாடிக் குடுவையாக உருவெடுக்கும். சின்ன ஓர் இடறல் போதும்; அந்தக் கண்ணாடிக் கூடு தூள் தூளாக!
நாம் கூர் மதியாளரா? இல்லை, புல்லறிவாளரா? என்பதை நம்பிக்கைதான் தீர்மானிக்கும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios