10/06/2023 (828)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அவைக்கு அஞ்சுபவர்களைப் போட்டுத் தாக்குகிறார் அவையஞ்சாமை அதிகாரத்தின் கடைசி ஐந்து குறள்களில்.
குறள் 726 இல், வாளையும் நூலையும் ஒப்பிட்டு, போருக்கு அஞ்சுபனுக்கு வாளோடு என்ன தொடர்பு; அவைக்கு அஞ்சுபனுக்கு நூலோடு என்ன தொடர்பு என்று ஏகடியம் செய்தார்.
அதையே நீட்டி, குறள் 727 இல், பகையினிடம் அஞ்சுபவனின் கையில் உள்ள கூரிய வாள் அஞ்சும்; அவையின்கண் அஞ்சுபவன் கற்ற நூல் அஞ்சும் என்றார்.
என்னதான் பல நூல்களைக் கற்றிருந்தாலும், அவைக்கு அஞ்சினால் பயன் ஒன்றுமில்லை என்றார் குறள் 728 இல்!
அதாவது, நம்ம பேராசான் தாக்கத் தொடங்கினால் அவ்வளவுதான் தொடர்ந்து அடிப்பார், நாம் நிமிரும் வரை!
அடுத்து என்ன சொல்கிறார் என்றால், கற்றறிந்தும் நல்ல அறிஞர்கள் கூடியுள்ள அவைக்கு அஞ்சிப் பேசாமல் இருப்பது, கற்றுக்கொள்ளாமல் இருக்கிறானே, அவனைவிட நீங்க கடைசி என்கிறார். அதாவது, அவனாவது கடைசி இருக்கையில் (last bench) இருப்பான். நீங்க வெளியேதான் இருப்பீங்க என்று சாடுகிறார்.
“கல்லா தவரின் கடைஎன்ப கற்றறிந்தும்
நல்லார் அவையஞ்சு வார்.” --- குறள் 729; அதிகாரம் – அவையஞ்சாமை
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் = நூல்களைக் கற்று அறிந்தும் நல்லார்கள் கூடியிருக்கும் அவைக்கு அஞ்சுபவர்களை, அங்குச் செல்ல, சொல்ல அச்சப்படுபவர்களை; கல்லாதவரின் கடை என்ப = உலகத்தார், படிக்காதவனிலும் படிக்காதவன், கடையன் என்பர்.
நூல்களைக் கற்று அறிந்தும் நல்லார்கள் கூடியிருக்கும் அவைக்கு அஞ்சுபவர்களை, அங்குச் செல்ல, சொல்ல அச்சப்படுபவர்களை, உலகத்தார், படிக்காதவனிலும் படிக்காதவன், அதாவது, கடையன் என்பர்.
முடிவுரையாக, அவைக்கு அஞ்சினால், நீ இந்த உலகத்தில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்பது போல முடிக்கிறார். நாம் இந்தக் குறளை முன்பே பார்த்துள்ளோம். காண்க 17/04/2023 (774), 18/04/2023 (775). மீள்பார்வைக்காக:
“உளர்எனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.” --- குறள் 730; அதிகாரம் – அவை அஞ்சாமை
அவைக்கு அஞ்சி கற்றதை விரித்து உணரச் சொல்லாதவர், அந்த அவையில் இருந்தாலும், இல்லாதவர்களோடுதான் அவரையும் சேர்க்க வேண்டும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments