05/05/2023 (792)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வினைத்திட்பம் உடையவர்கள் எவ்வாறு செயலாற்றுவார்கள் என்பதை இரண்டு குறள்களின் (668, 669) மூலம் படம் பிடித்துக் காட்டுகிறார்.
துளங்கு என்றால் அசைதல், ஆடுதல் என்று பொருள். அசைதல் (translations) என்பது மூவகை; ஆடுதல் (rotations) என்பதும் மூவகை. ஆக மொத்தம் அறுவகை.
ஆடுதலாவன: முன்னும் பின்னுமாக ஆடுவது; இடம், வலமாக ஆடுவது; மேலும் கீழுமாக ஆடுவது. இதனை, ஆங்கிலத்தில் முறையே, roll, pitch and yaw என்பார்கள். ஒரு பொருளானது திரவங்களில் பயனிக்கும்போது இதனைப் பார்க்கலாம். உதாரணம் – கப்பல், ஆகாய விமானம். திரவம் (fluid) என்பது நீர் மற்றும் காற்று போன்றவற்றினைக் குறிக்கும்.
Roll என்பது உருளுதல். அதாவது, ஒரு அச்சினைக் கொண்டு முன்னும் பின்னும் உருளும் அசைவு (Roll). உதாரணம் – சக்கரம், கடிகார முள்
இடம், வலமாக ஆடும் அசைவு Pitch. யானையானது கட்டி வைத்திருக்கும்போது இடம் வலமாக உடம்பை அசைத்துக் கொண்டிருக்கும்.
மேலும் கீழுமாக துள்ளுவது போல் அசைவது yaw.
ஒரு பொருளானது, திரவத்தில் இருக்கும்போது, இந்த மூன்று ஆட்டங்களும் ஒரு சேர நிகழும்!
அசைதலாவன: ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு முன்னும் பின்னும் நகர்வது (forward and reverse); இடம் வலமாக நகர்வது (left and right); மேலும் கீழுமாக (up and down) நகர்வது.
ஆக மொத்தம் ஆறு வழிகளில் ஒரு புள்ளி நகரலாம். இதனை six degrees of freedom என்பார்கள் ஆங்கிலத்தில்.
அதே போன்று, நம் எண்ணங்களானது இந்த ஆறு ஆட்டங்களில் சிக்கித் தவிக்கும்! இந்த ஆறு ஆட்ட அசைவுகளுக்கு, நம் பேராசான் பயன்படுத்தும் சொல்தான் “துளங்குதல்”.
(என்ன செய்ய? இன்றைக்கு என் ஆசிரியர் பாடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார். என்னால்தான் ஆடாமல் அசையாமல் உட்கார முடியவில்லை! உங்கள் நிலை எவ்வாறோ?)
சரி, இது நிற்க.
வினைத்திட்பம் உடையவர்கள் தாம் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்தும் போது, ஆடாமல் அசையாமல் மட்டுமல்ல, தூங்காமலும், விரைந்தும் செய்வார்களாம்!
எந்த வினைகளை என்பதற்கு, தாம் கலங்காது தெளிவாக கண்ட வினைகளை என்கிறார் நம் பேராசான்.
“கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.” --- குறள் 668; அதிகாரம் – வினைத்திட்பம்
கலங்காது கண்ட வினைக்கண் = மனத்தில் நன்றாக ஆய்ந்து பின் தெளிந்து செய்ய வேண்டிய செயல்களை; துளங்காது தூக்கம் கடிந்து செயல் = மன ஓட்டங்களில் ஆட்ட அசைவுகள் இல்லாது ஓய்வினைப் பாராமல் விரைவாகச் செய்வதுதான் செயல்.
மனத்தில் நன்றாக ஆய்ந்து பின் தெளிந்து செய்ய வேண்டிய செயல்களை, மன ஓட்டங்களில் ஆட்ட அசைவுகள் இல்லாது, ஓய்வினைப் பாராமல் விரைவாகச் செய்வதுதான் செயல்.
இது, வினைத்திட்பம் உடையவர்கள் எவ்வாறு செயலாற்றுவார்கள் என்பதற்கு நம் பேராசான் காட்டும் முதல் குறிப்பு.
இரண்டாம் குறிப்பை நாளைப் பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments