top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

கள் சொல்லும் விகுதியும்

23/05/2023 (810)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

இன்றைக்கு கள்ளைக் குறித்து பார்ப்போம் என்றார் என் ஆசிரியர்களுள் மூத்த ஆசிரியரான புலவர் வெற்றியழகனார். “வழக்கமும் விளக்கமும்”, “நல்ல தமிழ் எழுத”, “யாப்பதிகாரம்”, “ கவிதை எழுதுவது எப்படி?” இப்படி பல நூல்களை தமிழ் உலகிற்கு அளித்துள்ளார். தமிழ் நாடு அரசின் பாவேந்தர் விருது, கபிலர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.


தொல்காப்பியம், திருக்குறள், இராவண காவியம் போன்ற நூல்களுக்குத் தொடர் பொழிவுகளையும் வழங்கிக் கொண்டுவரும் எண்பத்தி ஏழு வயது இளைஞர் இவர்!


என்னை எப்படியாவது பிழையில்லாமல் எழுத வைத்துவிட வேண்டும் என்று தளராமல் முயற்சிப்பவர்! அவரின் முயற்சி கைகூடட்டும் என்று வாழ்த்துங்கள்.


இது நிற்க. நாம் கள்ளுக்கு வருவோம்.


‘கள்’ என்பது சொல்லானால் அது ஒரு ஊக்கத்தையும், போதையையும் கொடுக்கும் பானமாகும். கள் என்பது ஒரு சொற்றொடரின் முதலில் தோன்றினால் அது நிச்சயமாக சொல். உதாரணம்: கள் உண்டார்.


‘கள்’ என்பது அஃறிணை பன்மையைக் குறிக்கும் சொல்லின் விகுதியுமாகும். உதாரணம்: உண்டார்கள்.


இதுதான் எனக்குத் தெரியுமே என்கிறீர்களா, மிகவும் சரி.


நாள் என்றால் ஒருமை. நாளின் பன்மை நாட்களா? நாள்களா?


நாட்கள் என்று எழுதினால்தான் சரியான தமிழ் போலத் தோன்றுகிறது அல்லவா?


அப்படியில்லையாம்! நாட்கள் என்றால் அன்றைய தினம் இறக்கிய கள்ளைக் குறிக்குமாம். நாட்பட்ட கள்ளைக்கூட குறிக்கலாம்! ஆனால், அது நாளின் பன்மையைக் குறிக்காது!


நாளும் கள்ளும் ஆகிய இரு சொற்கள் புணர்ந்து வருவதால் இவ்வாறு பொருள்படுமாம். எனவே, நாளின் பன்மையைக் குறிக்க நாள்கள் என்றுதான் எழுத வேண்டுமாம்!


சரி, இதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கிறதா என்றால் நிறையவே இருக்காம்.


திருஞான சம்பந்தப் பெருமான் கோளறு பதிகத்தில்:


“...என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவை தாம்

அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே!”


“... உடனாய நாள்கள் அவைதாம்...” என்று சம்பந்தப் பெருமான் நாள்களையே பயன்படுத்துகிறார்.


வடலூர் வள்ளலார் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமான், பெரியாழ்வார் பெருமான் போன்ற சமயக் குரவர்களும், பெரும் புலவர் கம்பர் பெருமானும் “நாள்கள்” என்றே பயன்படுத்தியுள்ளனர்.


எனவே, நாள்கள் என்பதைப் பயன்படுத்துவோமாக.


வாழ்த்துக்கள் என்றால் ‘வாழ்த்தாகிய கள்’ என்றும், எழுத்துக்கள் என்றால் ‘எழுத்தாகிய கள்’ என்றும் பொருள் மாறிவிடும்!


எனவே, ‘க்’ மிகாமல், அதாங்க ‘க்’ போடாமல், வாழ்த்துகள், எழுத்துகள் என்பதுதான் சரி.


பொருள்களா? பொருட்களா?

சந்தேகமேயில்லாமல், பொருள்கள் என்பதுதான் சரி.


சொற்களா, சொல்களா என்றால் சொல்கள் என்பதுதான் சரி என்கிறார் என் ஆசிரியர்.


“கள்” விகுதி தொல்காப்பியக் காலத்தில் இல்லையாம். நன்னூலார் காலத்தில்தான் வந்ததாகத் தெரிவிக்கிறார் என் ஆசிரியர்.


கள் விகுதி போடாமலேயே ஒருமை பன்மையை தெரிந்து கொள்ளலாமாம்.


‘மாடு வந்தது’ என்றால் ஒரு மாடு வந்தது என்று ஒருமையைக் காட்டிவிடும். ‘மாடு வந்தன’ என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடு வந்தன என்று பன்மையைக் காட்டிவிடுமாம்.


கள்ளைப் போட்டே பழக்கப்பட்டுட்டோம். விட முடியுமா?

கள்ளில் ஒரு போதை இருக்கத்தானே செய்கிறது! தவிர்க்க முயலுவோம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page