18/10/2022 (595)
Mania க்கள் பலவிதம். Mania ன்ன என்னன்னு கேட்கறீங்களா? அது ஒன்றும் இல்லை. பித்து பிடிச்சு இருப்பது. அதிகமான பயம், பற்று. எல்லாமே கொஞ்சம் ஓவரா பண்ணுவது.
ஆங்கிலம் படிக்கனும்தான். சிலர் ஆங்கிலத்தின் மேல அளவு கடந்த பற்று வைப்பாங்க. அவங்களை ANGLOMANIAC ன்னு சொல்வாங்க. சிலர் புத்தகப் புழுவாக இருப்பாங்க, அவங்களுக்கு BIBILIOMANIAC ன்னு பேர். இது போல பல ‘மேனியாக்குகள்’ இருக்கும். எல்லாமே மோசம்தான். அதில் சிலது பரவாயில்லை, சிலது நடுத்தரம், சிலது ரொம்பவே மோசம்.
DIPSOMANIAC ன்னு சிலர் இருப்பாங்க. சிலர் இல்லைன்னு சொல்றிங்களா? ரொம்ப சரி. நம்ம ஊரிலே பலரும் அப்படித்தான். டிப்ஸொமேனியாக் என்றால் குடி போதைக்கு அடிமையானவங்க.
“…நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான்
குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான்
மீண்டும் “__________” நினைத்துவிட்டான்,
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான்…” கவிஞர் வைரமுத்து, சிந்து பைரவி திரைப்படத்தில்.
அந்த கோடிட்ட இடத்தை எதையாவது இட்டு நிரப்பி குடிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஏதோ ஒரு காரணம் அவ்வளவுதான்.
அதனாலே சமுகத்தில் ஏற்படும் தலைகுனிவு, அவமானங்கள், உடலுக்கு ஏற்படும் அழிவு, அப்படி இப்படின்னு எதைப்பற்றியும் அவர்களாலே சிந்திக்கவே முடியாது.
எந்த போதையும் கெடுதிதான். ஆனால் இந்தக் கள்ளின் போதை ரொம்பவே மோசம்.
உங்களுக்கெல்லாம் தெரிந்தக் கதைதான்.
ஒருத்தன் ரொம்பவே நல்லவனா இருந்தானாம். அவனை ஒரு வழி பண்ணனும் சிலர் முடிவு பண்ணாங்களாம். யாருஅந்த சிலர்ன்னு கேட்க்காதீங்க. அது இப்ப ரொம்ப முக்கியம் இல்லை.
அவங்க அவனைத் துப்பாக்கி முனையிலே நிறுத்தி “நாங்க உன்னை ஒன்னு பண்ணச்சொல்வோம் அதைச் செய்தால் உன்னை விட்டுவிடுவோம்” ன்னு சொன்னாங்களாம்.
மேலும், “நாங்க ஒன்னும் அவ்வளவு கெட்டவங்க இல்லை. உனக்கு மூன்று காரியத்தைச் சொல்வோம். அதிலிருந்து உனக்கு எது சரின்னு படுதோ அதை நீ செய்யலாம்”. அது உன் விருப்பம்ன்னு சொன்னாங்களாம்.
1. ஒரு சின்னக் குழந்தையைக் கொன்னுடனும்; இல்லையென்றால்
2. அந்தக் குழந்தையின் அம்மாவைச் சின்னாபின்னம் பண்ணனும்; அப்படியும் இல்லைன்னா;
3. அந்த சொம்பிலே இருக்கும் கள்ளைக் குடிச்சுடனும்ன்னு சொன்னாங்களாம்.
அவனுக்கு, முதல் இரண்டும் ரொம்பவே பாவமா தோணுச்சாம். மூன்றாவதை பண்ணிடலாம்ன்னு, அந்த சொம்பை எடுத்து கட, கடன்னு குடிச்சுட்டானாம்.
போதை தலைக்கேற அந்த தாயிடம் தாறுமாறாக நடக்க முற்பட்டானாம். அதைப் பார்த்த அந்தக் குழந்தை அழுது சத்தம் போட, அந்தக் குழந்தை தூக்கி தரையிலே ஓங்கி அடித்தானாம்.
அந்தக் குழந்தை அவ்வளவுதான்.
இப்ப அவன் மிருகமாகவே ஆயிட்டானாம். அப்புறம்
எண்ணாகியிருக்கும்ன்னு உங்களுக்கு தனியாக சொல்லனுமா என்ன?
இது கற்பனையல்ல. இதை நீங்கள் அடிக்கடி செய்தித் தாள்களில் பார்க்கலாம்.
இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தச் ‘சிலர்’ வேற யாருமில்லை. அவன் 'மனசு'தான்.
வரப்போகும் எந்த அவமானங்களும் அவர்கள் கண்ணுக்குத் தெரியாது. மேலும், மேலும் விரும்பிக் குடிப்பார்கள். இதை நம்ம பேராசான் கவனித்திருக்கார்.
இந்த உவமையைச் சொல்லி, இது போலத்தான் காதலில், காமத்தில் ஆழ்ந்தவர்கள் ஊர் பழித்துப் பேசுவதை மேலும் மேலும் செய்யனும் என்று விரும்புவார்களாம்.
இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை ‘மானம் போவது; அதைப்பற்றி கவலைப் படாமல் இருப்பது” இது மட்டும்தான்!
“களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.” --- குறள் 1144; அதிகாரம் – அலர் அறிவுருத்தல்
வேட்கை = விருப்பம்; வேட்டற்றால் = விரும்புவதால்;
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் =போதை ஏற, ஏற கள்ளினை விரும்புவது போல; காமம் வெளிப்படுந் தோறும் இனிது = அவர்களின் களவு வாழ்க்கை ஊர் முழுவதும் உலாவர, உலாவர இனிமையாக உணர்வார்களாம்.
போதை ஏற, ஏற கள்ளினை விரும்புவது போல, அவர்களின் களவு வாழ்க்கை ஊர் முழுவதும் உலாவர, உலாவர இனிமையாக உணர்வார்களாம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments