27/06/2022 (486)
அடுத்த குறள் சற்று வித்தியாசமாக அமைத்துள்ளார். ஆகையால், முதலில் குறளையும் அதற்கு அறிஞர் பெருமக்கள் சொன்ன கருத்துகளையும் பார்த்துவிட்டு சிந்திப்போம்.
“களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.” --- குறள் 928; அதிகாரம் - கள்ளுண்ணாமை
அறிஞர் மு.வ. உரை: கள்ளுண்பவன் `யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன்' என்று சொல்லுவதை விடவேண்டும்: நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
புலவர் புலியூர்க்கேசிகன் உரை: கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, ‘யான் உண்டு அறியேன்’ என்று பொய் கூறுவதைக் கைவிடுக.
புலவர் சாலமன் பாப்பையா உரை: போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.
நம்மாளு: ஐயா, எனக்குத் தோன்றுவதைச் சொல்கிறேன். தவறு இருப்பின் தவிர்க்க.
எனக்கு எப்படிப் படுகிறது என்றால், “இந்த வாழ்க்கை எனக்கு நரகமா இருக்கு. ஒரு சுகமும் எனக்கு கிடைக்கலை. மகிழ்ச்சி என்பது கொஞ்சம்கூட இல்லை. எல்லாமே தொல்லையா இருக்கு. என்னாலே ஒன்னுமே பண்ண முடியலை. நிம்மதியில்லைங்க. அதான், நான் தண்ணியடிக்கிறேன்.” என்று சொல்வதுதான் பெரும்பாலும், போதைக்கு அடிமையானவர்களின் நியாயமாக இருக்கு.
ஆனால், தண்ணியடிச்சுட்டா, அவர்களே என்ன பேசுவார்கள் என்றால் நான் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா, நான் சூரன், வீரன் … என்னை யாரும் ஒன்னும் செய்யமுடியாது என்று தைரியமாக பேசுவார்கள். அளந்தும் விடுவார்கள். அவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம்.
சரி, ஏன் சார், இவ்வளவு பெரிய ஆளாக இருக்கீங்க, நீங்க இப்படி தண்ணியடிச்சு கலாட்டா பண்ணலாமா? என்று கேட்டால், அதான் சார், “என் தங்கச்சிக்கு நாய் கடிச்சுடுச்சி சார்” என்று ஓரு மொக்கையான காரணத்தைச் சொல்லி அழுவார்கள்.
“களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.” --- குறள் 928; அதிகாரம் - கள்ளுண்ணாமை
களித்தறியேன் என்பது கைவிடுக = சுகமே கிடைக்கலை என்று சொல்லும் ஏமாற்றுப் பேச்சு பேசாதே;
நெஞ்சத்து ஒளித்துவும் ஆங்கே மிகும் = நீ தண்ணி அடிச்சுட்டு உளறும் போது, சும்மா ஊரை ஏமாற்றி, உன்னையும் ஏமாற்றிக் கொள்ளும் உண்மையும் எல்லாருக்கும் தெரியும்.
நம்மாளு உரை: சுகமே கிடைக்கலை என்று சொல்லும் ஏமாற்றுப் பேச்சு பேசாதே; நீ தண்ணி அடிச்சுட்டு உளறும் போது, சும்மா ஊரை ஏமாற்றி, உன்னையும் ஏமாற்றிக் கொள்ளும் உண்மையும் எல்லாருக்கும் தெரியவரும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments