29/06/2022 (488)
போதை மயக்கத்தில் வீழ்ந்து கிடப்பவன் திருந்த என்ன வழி?
ஓரு வழி இருக்காம். அவன் போதையில் இல்லாதபோது, சற்று தெளிவாக இருக்கும்போது, அவனைப்போல் போதையில் சிக்குண்டு இருப்பவனின் செயல்களைக் கண்டால், அந்த கேவலமான நிலை புலப்படலாமாம்.
போதையில் இருக்கும்போது, தானும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோமோ என்ற கேள்வி அவன் மனதில் எழுமாம். அது அவனுக்கு மன மாறுதலைத்தருமாம்.
“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.” --- குறள் 930; அதிகாரம் – கள்ளுண்ணாமை
கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் = தான் போதையில் இல்லாத போது, மற்றவன் போதையின் காரணமாக செய்யும் கீழ்த்தரமான செயல்களைக் காணும்போது; ஒரு நிலையில் இல்லாமல் அவன் செய்யும் இழிச் செயல்களைக் கண்டு,
உள்ளுதல் = எண்ணுதல்; உள்ளான்கொல் = எண்ணமாட்டானா;
உண்டதன் சோர்வு உள்ளான்கொல் = தாமும் அதுபோல்தான் போதை மயக்கத்தில், கீழான, மற்றவர்கள் வெறுக்கும்படியான செயல்களைச் செய்து கொண்டிருப்போம் என்று எண்ணமாட்டானா? எண்ணுவான். அது அவன் திருந்துவதற்கு வழி வகுக்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments