11/08/2023 (889)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
சும்மா ஒரு சின்ன வசதி, பொருள், வாய்ப்பு எது கிடைத்தாலும் போதையின் பாதையில் போய்விடுவானாம் பேதை - சொல்கிறார் நம் பேராசான்.
பாருங்க அந்தக் காலத்திலும் இந்தப் போதைப் பிரச்சினை இருந்திருக்கும் போல இருக்கு!
என்ன அப்படிக்கூடச் சொல்லியிருக்காரா? ஆமாம் சொல்லியிருக்கார்.
“மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.” --- குறள் 838; அதிகாரம் – பேதைமை
பேதை தன் கையொன்று உடைமை பெறின் = பேதைக்குக் கொஞ்சமாக பொருள் கிடைத்தாலும்; மையல் ஒருவன் களித்தற்றால் = (அது என்ன செய்யும் என்றால்) ஏற்கெனவே நிதானம் தப்பி இருக்கும் ஒருவன் மேலும் கள்ளையும் குடித்துவிட்டால் எப்படி ஆட்டம் போடுவானோ அதுதான் நிலை.
பேதைக்குக் கொஞ்சமாக பொருள் கிடைத்தாலும்.அது என்ன செய்யும் என்றால், ஏற்கெனவெ நிதானம் தப்பி இருக்கும் ஒருவன் மேலும் கள்ளையும் குடித்துவிட்டால் என்ன ஆகுமோ அது போலத்தான்! ஆட்டம் போடுவான்; மயங்கி கீழே விழுவான்; யாருக்கும் பயன் இருக்காது.
போதையில் கால் தவறி விழுந்தால் பேதை!
பேதையார் நட்பிலும் ஒரு சிறப்பு இருக்கு என்று சொன்னதை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 19/12/2021 (299). மீள்பார்வைக்காக:
“பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்.” --- குறள் 839; அதிகாரம் – பேதைமை
பேதையர் இருவருக்குள் இருக்கும் நட்புகூட ரொம்பவே இனிதாம்! ஏன் என்றால் அவர்கள் பிரியும் போது எந்தத் துன்பமும் இருக்காதாம்.
என்னென்னமோ சொல்லி பேதைமையைத் தாக்கினார். இருந்தாலும் நம்ம வள்ளுவப் பெருந்தகைக்கு மனசு ஆறலை. கடைசியாக போட்டு ஒரே தாக்காகத் தாக்குகிறார்.
வள்ளுவப் பெருமான்: அவன் என்ன தம்பி, அவன் ஒரு பெரிய ஆளு என்று நினைத்துக் கொண்டு அறிவில் சிறந்தோர் கூடி இருக்கும் அவையிலும் புகுந்து குழப்புகிறான். அதற்கு நான் என்ன ஒரு உதாரணம் சொல்வது? சரி இப்படிச் சொல்கிறேன் புரிந்துகொள்.
அவன் அங்கே இங்கே என்று காலணியில்லாமல் நடக்கிறான். எதை எதையெல்லாமோ மிதித்துக் கொண்டு வருகிறான். வீட்டுக்கு வந்து காலைக் கழுவுவதும் இல்லை. அப்படியேப் போய் படுக்கையறையில் நுழைகிறான்.
“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.” --- குறள் 840; அதிகாரம் – பேதைமை
சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் = சான்றோர் அவையினில் பேதை காலடி எடுத்து வைப்பது என்பது; கழாஅக்கால் = கழுவாத காலுடன் படுக்கையறையில் நுழைவதைப் போல.
சான்றோர் அவையினில் பேதை காலடி எடுத்து வைப்பது என்பது கழுவாத காலுடன் படுக்கையறையில் நுழைவதைப் போல.
என்ன சொல்ல வருகிறார் என்றால், சான்றோர்கள் அவையினில் நுழையும் போது அதற்குத் தேவையான முன் ஏற்பாடுகள் இன்றிச் செல்பவனும் பேதைதான் என்கிறார்.
பேதைகள் பல விதம். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம் என்பது போல பத்துப் பாடல்களில் படம் பிடித்துக் காட்டிவிட்டார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
ความคิดเห็น