05/07/2022 (494)
பொருள் மேல் அதீத பற்று கொண்டு, கஞ்சனாக இருப்பவர்களுக்கு “இவறியான்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் நம் பேராசான்.
வறியான் என்றால் ஒன்றும் இல்லாதவன். இவறியான் என்றால் இருந்தும் இல்லாதவன்!
தலைமையில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய மூன்று எது என்று “குற்றங்கடிதல்” எனும் அதிகாரத்தில் நம் பேராசான் சொல்லியிருந்தார். மீள்பார்வைக்காக காண்க: 02/04/2021
“இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.” …குறள் 432; அதிகாரம் - குற்றங்கடிதல்
இவறலும் = ஒருத்தருக்கு தேவைபடும் போது கொடுக்காமல் இருப்பதும்; மாண்பு இறந்த மானமும் = சும்மாவே பந்தா பண்ணுவதும்; மாணா உவகையும் = தரமற்ற கொக்கரிப்பும்; இறைக்கு ஏதம் = தலைமை தவிர்க்க வேண்டிய குற்றங்கள்.
மேலும், ஒருவன் ஏன் இவறியான் ஆகிறான் என்பதற்கு அதீத பற்றுதான் காரணம் என்பதையும் குறள் 438ல் தெரிவித்திருந்தார். காண்க: 08/04/2021
“பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன்று அன்று.” --- குறள் 438; அதிகாரம் - குற்றங்கடிதல்
பற்றுள்ளம் என்னும் = அதீத ஆசை, பற்று எனும்; இவறன்மை = இவறல் + தன்மை; இவறல் தன்மை= தேவைக்குஉதவாத கஞ்சத்தன்மை; எற்றுள்ளும் = குற்றத்தன்மை எல்லாவற்றுள்ளும்; எண்ணப் படுவதொன்று அன்று = எண்ணப்படாது (அதற்கும் கீழேயே வைக்கப்படும்) கீழிலும் கீழாக வைக்கப்படும். அதீத பற்று கொண்டு தன் பொருளை மறைத்து, ஒருவனின் தேவைக்கு உதவாத கஞ்சத்தன்மை, குற்றங்களிலெல்லாம் கீழானது.
அப்படி இவறியானாக இருப்பவர்களும் இல்லாகியார் ஆகி விடுவார்களாம்! எப்போது என்றால் சூதின் பின் சென்றால். ஒருவனிடமிருந்து பணத்தைப் பறிக்க வேண்டுமா அவன் ஆசையைத் தூண்டிவிடு. இதுதான் சூதின் அடிப்படை. குறளுக்கு வருவோம்.
“கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.” --- குறள் 935; அதிகாரம் - சூது
கவறு = சுதாடும் கருவி; கழகம் = அதை ஊக்குவிக்கும் இடம்; கை = தனது திறமை என்று நம்புவது; தருக்கி = இம் மூன்றையும் விரும்பி; இவறியார் = அதித ஆசை கொண்டவர்; இல்லாகியார் = ஒன்றும் இல்லாமல் போவார்
கவறும் கழகமும் கையும் தருக்கி = சூதாட்டத்திற்கு தேவையான கருவி, களம், திறம் இந்த மூன்றையும் விரும்பி(னால்); இவறியார் இல்லாகியார் = எப்பேர்ப்பட்ட கருமியாக இருந்தாலும் காலியாகிவிடுவார்.
கருமியாக இருப்பவன் தனக்கும் செய்து கொள்ள மாட்டான், மற்றவர்களுக்கும் உதவ மாட்டான். பேராசையைத் தூண்டிவிட்ட காரணத்தால், சூதின் பின் சென்று கட்டிக்காத்த அனைத்தையும் இழப்பான்.
இதற்கு நிறைய உதாரணங்கள் நாள்தோறும் நாளிதழ்களில் காணலாம். பொருள்களை இழந்தபின் காவல் நிலையத்தின் வாசலில் காத்திருப்பார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comentários