19/05/2023 (806)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
யானையின் மீது வந்தான்! அவன் மார்பினிலோ வண்டுகள் மொய்க்கும் வெற்றி மாலைகள். அவனைக் கண்ட கணத்தில் என் நெஞ்சு அவன் பின்னோடு தொடர்ந்து சென்றது. அது இந்நேரம் அவனிடம் சென்றுவிட்டதா? அவன் நெஞ்சோடு கலந்ததா?
இல்லை, இடையிலே கை ஊன்றி வாயிலிலேயே நின்று கொண்டிருக்கிறதா?
என்று, அந்த மாறனிடம் காதல் வயப்பட்டவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறாள்!
நெஞ்சு செல்லுமா, அவனுடன் கலக்குமா, இல்லை கை ஊன்றிதான் நிற்குமா?
நிச்சயம் உண்மையில்லை. நூறு சதவிகிதம் கற்பனைதான்!
அது எப்படி நிகழும் என்று நாம் கேட்டால் காதல் செய்து பாருங்கள் புரியும் என்பார்கள்.
இது நிற்க. இவ்வாறு கற்பனையை நெஞ்சின் மீது ஏற்றி நடவாத ஒன்றைச் சொல்வதுதான் இலக்கணச் சொல்லில் ஒரு வகையாம். இலக்கணச் சொல் மூன்று வகை என்று பார்த்தோம். அதாவது, விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை.
மேற்கண்ட கற்பனை, “விட்ட இலக்கணை”யைச் சாரும் என்கிறார்கள் தமிழ் புலவர்கள்.
அந்தப் பாடலைப் பார்ப்போம்:
“சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கில் கையூன்றி – முன்றில்
முழங்கும் கடாயானை மொய்ம்மலர்தார் மாறற்(கு)
உழந்துபின் சென்றவென் நெஞ்சு.” --- முத்தொள்ளாயிரம்
செவ்வி = நேர் காணல், வளமை, நேர்மை, அழகு, காலம்; மருங்கில் = இடையில்; முன்றில் = முன் + இல் = இருப்பிடத்தின் முன்னால்; கடா யானை = ஆண் யானை; மொய்ம்மலர் தார் = வண்டுகள் மொய்க்கும் மலர் மாலை. ஆண்கள் அணியும் மாலைக்கு தார் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். மாறன் = காதலன்
சென்றதுகொல் = சென்றதா?
போந்ததுகொல் = நுழைந்ததா?
மருங்கில் கையூன்றி செவ்வி பெறுந்துணையும் நேர் நின்றதுகொல் = இடையிலே கையை ஊன்றி அவரைக் காண நின்றதா?
கற்பனைக் களஞ்சியம்தான் முத்தொள்ளாயிரம். இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. அவர் சங்க காலப் புலவர் இல்லை என்றும் அவர் வாழ்ந்த காலம் கி.பி, ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் தமிழறிஞர் அறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் வரையறுக்கிறார்.
நமக்குக் கிடைத்திருப்பது, புறத்திரட்டு என்ற புறநூல் தொகுப்பின் மூலம் 108 பாடல்களும், உரைகளின் மூலம் மேலும் 22 பாடல்கள் கிடைத்தன என்கிறார்கள்.
சென்றது போக நின்றதையாவது செப்பனிட்டு வைக்க வேண்டும் இந்தத் தலைமுறை என்றார் என் ஆசிரியர்.
ம்ம்...
சரி, இலக்கணச் சொல்லுக்கு இந்தப் பாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்புச் சொல் குறித்து நாளைப் பார்க்கலாம் என்றார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments