10/01/2024 (1040)
அன்பிற்கினியவர்களுக்கு:
“விழுமம்” என்றால் துன்பம் என்று பொருள். விழுமம் மூன்று வகைப்படும் என்பது போல மூன்று குறள்களில் விழுமம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
1) வீயா விழுமம்;
2) உய்யா விழுமம்;
3) எற்றா விழுமம்.
1. வீயா விழுமம் என்றால் நீங்காத் துன்பம்.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும். – 284; - கள்ளாமை
களவெடுப்பதில் இன்பம் கண்டு அதனில் ஈடுபாடு அதிகரித்தால், அது ஏற்படுத்தப் போகும் விளைவுகளினால் நீங்காத் துன்பம் நிச்சயம். காண்க 03/01/2024.
2. உய்யா விழுமம் என்றால் மீளமுடியாத் துன்பம் என்று பொருள்.
சட்டத்தின் பார்வையில் ஒருவர் பிறர்க்கு ஒரு தீங்கு இழைக்கிறார் என்றால் அதற்கு ஏதாவது தாக்கப்பட்டவரிடம் இருந்து நெருக்குதல் (Provocation) இருந்ததா என்றும் பார்ப்பார்கள். எந்தவித நெருக்குதலும் எதிராளியிடம் இல்லாதபோதும் (without any provocation) தாக்கினால் அந்தத் தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு, தீர்மானித்து அல்லது தீய எண்ணத்தோடு நிறைவேற்றப்பட்டது (premeditated) என்று கருதி தண்டனை கடுமையாக வழங்குவார்கள். தப்பிப்பது கடினம்.
ஒருவர் நமக்கு எதிர் நிலையில் இருக்கலாம். இருந்தாலும், அவர் நமக்கு எந்த ஒரு துன்பத்தைத் தராத நிலையில் நாமே வலியச் சென்று அவரைத் தாக்குவது என்பது கொடுங் குற்றம். அவர் தாக்கினாலே பொறுத்துப் போக வேண்டும் என்பது துறவறத்தில் இருப்பவர்களுக்கு நம் பேராசான் கொடுக்கும் அறிவுரை. காண்க குறள் 312 – 09/01/2024.
அப்படி இருக்கும்போது, ஏதும் செய்யாமல் இருக்கும் பகைவர்க்கு, அருள் பாதையில் பயணிக்க விரும்புபவர், வலியச் சென்று தாக்கியபின், அச்செயல் மீளமுடியாத் துன்பத்தை அவர்க்கு அளிக்கும் என்கிறார்.
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். – 313; - இன்னா செய்யாமை
செய்யாமல் செற்றார்க்கும் = நமக்கு எந்தவித தீங்கும் செய்யாமல் இருக்கும்
பகைவர்க்கும்; இன்னாத செய்த பின் = நாம் வலியச் சென்று ஒரு தீங்கினைச் செய்தபின்; உய்யா விழுமம் தரும் = அத் தீங்கு நமக்கு மீளமுடியாத் துன்பத்தை நிச்சயம் அளிக்கும்.
நமக்கு எந்தவித தீங்கும் செய்யாமல் இருக்கும் பகைவர்க்கும், நாம் வலியச் சென்று ஒரு தீங்கினைச் செய்தபின், அத் தீங்கு நமக்கு மீளமுடியாத் துன்பத்தை நிச்சயம் அளிக்கும்.
பகைவர்க்கும் என்பது முற்றும்மை. எனவே, யாருக்குமே வலியச் சென்று தீங்கிழைப்பது என்பது தப்பிக்க இயலாத் துன்பத்தை அளிக்கும்.
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்களின் பார்வை வேறாக இருக்கிறது. அவை வருமாறு:
மூதறிஞர் மு. வரதராசனார்: தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாதத் துன்பத்தையே கொடுக்கும்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா: நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.
3. எற்றா விழுமம் – எழுச்சியை, வளர்ச்சியைத் தடுக்கும் துன்பம்.
நாம் ஏற்கெனவே பார்த்த குறள் தான் இது. காண்க 01/05/2023.
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். - 663; - வினைத்திட்பம்
நாம் செய்யும் செயல்கள் அதன் வெற்றிகரமான முடிவிலே வெளிப்படுவதுதான் நிருவாகம். அதுதான் வினைத்திட்பம். செயல் முடியும் முன்னரே, அஃதாவது, இடையிலேயே பகைவருக்கும் வெளிப்பட்டு நிற்குமாயின் அச்செயலை வெற்றிகரமாக முடிக்க முடியாது துன்பத்தைத் தரும்.
இந்த மூன்று துன்பங்களுள் எந்தத் துன்பம் மிகக் கொடியது என்று நினைக்கிறீர்கள்?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments