22/09/2023 (930)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
விருந்தோம்பல் செய் என்றார்; அப்படியே கொஞ்சம் இன்சொல் பேசு என்றார்; அந்த இன்சொல் பயனுள்ளதாகவும் இருக்கட்டும் என்று கோடீட்டார்.
சரி, நன்று தம்பி நீ அடுத்து செய்ய வேண்டியது எது தெரியுமா நீ இந்த நிலைக்கு உயர்ந்து வந்துள்ளாய் அல்லவா, அதற்கு உன்னை உயர்த்தியவர் பலர் இருப்பர் அவர்கள் செய்த நன்றி ஒன்றுதான் என்றாலும் அதற்கு நன்றி பாராட்டாமல் இருக்காதே, அதனை மறக்காதே; அதே வேளை, அவர்கள் தப்பித் தவறி ஏதேனும் உனக்குத் தடையை ஏற்படுத்தி இருந்தால் அதனை அப்போதே மறந்துவிடு என்கிறார் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில்.
“நீ ஒன்று கொடுத்தால் நான் ஒன்று கொடுப்பேன்”; “இதை நாம் கொடுத்தால் அவர் அதை நமக்குக் கொடுக்கக் கூடும்” – இப்படியெல்லாம் கணக்கிட்டுப் பார்ப்பது வணிகம்.
நாம் ஒருவருக்கு ஒரு வணக்கம், சின்னதொரு புன்னகை அதைக் கூட செய்திருக்க மாட்டோம். ஆனால், ஆபத்துக் காலத்தில் ஓடோடி வந்து நம்மைக் கேட்காமலே காப்பாற்றிவிட்டிருப்பார். அவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்திடல் கூடும். எதை ஈடாகச் சொல்வது அந்தப் பெரும் உதவிக்கு?
நம் பேராசான் சொல்கிறார் அவர்கள் செய்த உதவிக்கு உன்னால் கைம்மாறு செய்யமுடியாது. அந்த உதவிக்கு ஈடு சொல்ல வேண்டுமா? அது இந்த பூமிப் பந்தினைவிடவும், அது மட்டுமல்ல, அது இயங்கிக் கொண்டிருக்கும் வான் வெளிப் பரப்பைனைவிடவும் பெரியது தம்பி.
நீ செய்ய வேண்டியதெல்லாம் அதுபோன்ற உதவியைத் தேவைப்படுவோருக்கு விரைந்து செய். அதுதான் இந்தப் பூமிப் பந்தைத் தொடர்ந்து இயக்கும்.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.” --- குறள் 101; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு = எந்த ஓர் உதவியையும் நாம் ஒருவற்கு செய்யாமல் இருந்திருந்தாலும் அவர் நமக்கு ஓடோடி வந்து செய்யும் உதவிக்கு; வையகமும் வானகமும் ஆற்றல் அரிது = இந்தப் பூமிப் பந்தையும் அது இயங்கிக் கொண்டிருக்கும் வான் பரப்பையும் ஈடாக்கினால்கூட ஈடாகா.
எந்த ஓர் உதவியையும் நாம் ஒருவற்கு செய்யாமல் இருந்திருந்தாலும் அவர் நமக்கு ஓடோடி வந்து செய்யும் உதவிக்கு இந்தப் பூமிப் பந்தையும் அது இயங்கிக் கொண்டிருக்கும் வான் பரப்பையும் ஈடாக்கினால்கூட ஈடாகா.
காலத்தினாற் செய்த உதவி மிகச் சிறிதாக இருக்கலாம். ஆனால் அந்த உதவி இந்த வையகம் இருக்கிறதே அதனைவிட மிகப் பெரிது என்றார் குறள் 102 இல். காண்க 13/09/2023 (921). மீள்பார்வைக்காக:
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.” --- குறள் 102; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments