13/05/2023 (800)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வரலாறு எப்போதும் முக்கியம். வரலாற்றினை மறந்தால் வரலாறு மீண்டும் நிகழும்! As memory fades, history tends to repeat.
ஒன்றைச் செய்ய வேண்டும் என்றால், நாம் செய்யப்போகும் செயலை வேறு யாராவது இதற்கு முன் செய்திருக்கிறார்களா, அவர்கள் எவ்வாறு வென்றார்கள் அல்லது வெற்றி வாய்ப்பை இழந்தார்கள் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் எப்போதும் நன்மை பயக்கும்.
ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் ஒர் ஆராய்ச்சியைத் தொடங்கும் முன் Literature Survey என்று ஒன்றினைச் செய்வார்கள். அதாவது, இதற்கு முன் செய்த ஆராய்ச்சிகள் என்னென்ன, அவைகளின் முடிவுகள் காட்டுவது என்ன என்றெல்லாம் ஆராய்ந்த பின்புதான் தொடங்குவார்கள். இம் முறை புதிதாகச் செய்யவும் பயன்படும். ஏற்கெனவே, முன்செய்தவர்கள் செய்ததை நாம் செய்து பயன் பெறவும் பயன்படும்.
முன்னால் சென்றவர்களைப் படித்தல் என்பது அனைத்துச் செயல்களுக்கும் பொருந்தும் என்பதை நம் பேராசான் எடுத்து சொல்லுகிறார்.
“செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.” --- குறள் 677; அதிகாரம் – வினை செயல்வகை
செய்வினை செய்வான் செயல்முறை = ஒரு செயலைச் செய்யப்புகும் ஒருவனின் செயல்முறை; அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல் = அச் செயல்களை முன்னரே செய்து அதன் வழிமுறைகளை அறிந்தவனின் உத்திகளை உள்வாங்கிக் கொள்ளுதலாகும்.
ஒரு செயலைச் செய்யப்புகும் ஒருவனின் செயல்முறை, அச் செயல்களை முன்னரே செய்து அதன் வழிமுறைகளை அறிந்தவனின் உத்திகளை உள்வாங்கிக் கொள்ளுதலாகும்.
முன் சென்றவனின் வழி முறைகளை ஆராயும்போது, இந்த அதிகாரத்தில் ஐந்தாவது(675 ஆவது) குறளில் சொல்லிய பொருள், கருவி, காலம், வினை, இடம் முதலியனவற்றைக் கொண்டும், மேலும், ஆறாவது (676 ஆவது) குறளில் கூறிய முடிவு, இடையூறு, முற்றியாங்கு முதலியனவையும் ஆராய வேண்டும்.
தற்போது, அனைத்து கல்லூரி மாணவர்களும் படிக்கும் ஒரு பாடம் “ஆராய்ச்சி முறை” அதாவது, “Research Methodology”. இதைத்தான் நம் பேராசான் மிகவும் சுருக்கமாகவும், அதே சமயம் ஆழமாகவும் வினை சம்பந்தப்பட்ட அதிகாரங்களில் அழகாக எடுத்து வைத்துள்ளார்.
அதனால்தான், திருக்குறள் வாழ்க்கைக்கு உதவும் நூல்களுள் முதன்மையாக கொண்டாடப்படுகிறது.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentare