09/08/2021 (167)
உணர்ச்சி வயப்படுதல் என்பது வேறு; உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தல் என்பது வேறு. உங்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும்.
ஒன்று, புலன் உணர்ச்சிகள் நம்மை செலுத்தினால் அதன் பின்னே நாம் ஓடுவது. அது நமக்கு எஜமானாகிறது.
மற்றது, அவ்வுணர்ச்சிகளை நம் கட்டுக்குள் வைத்தல். அப்போது, நாம் அதற்கு எஜமான்.
உணர்சிகள் என்பது அனைவருக்கும் பொது. அதாவது உணர்ச்சிகளும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”. உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்கிறோமோ அங்கேதான் வித்தியாசம், சிறப்பு பிறக்கிறது.
அது சரி. புரிஞ்சிதான் இருக்கு, முடியலையேப்பா என்ன பண்ண? ன்னு கேள்வி எழுது. அதற்குதான் சில பயிற்சிகள் பண்ண வேண்டும் என்கிறார்கள்.
சீக்கிரம் சொல்லுப்பான்னு கேட்கறீங்க, சரியா? இதை, இப்போ நீங்க மனசிலே நினைக்கிறீர்களா? இப்போ, நீங்க உணர்ச்சி வசப்படுகிறீர்கள். அப்போ, கேட்கவேப் படாதா? அப்படியும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலேதான் கட்டுக்குள்ளே வைக்கிற வித்தை இருக்கு.
சரி, பயிற்சிகள் நாம ஏற்கனவே பார்த்தது தான். இயமம், நியமம் முதலிய எண்வகை யோக முயற்ச்சிகள்ன்னு பார்த்தோம். பதஞ்சலி முனிவரின் யோக சாத்திரத்திலே இருக்காம்.
போப்பா, ரொம்ப தமாஷ் பண்ணாதே. முடிகிற காரியமா சொல்லுவேன்னு பார்த்தா எதையோ சொல்ற. அதெல்லாம், பெரிய ஆளுங்க பண்றது. கிளம்பு அப்புறம் பார்க்கலாம்ன்னு தோணும்.
பாருங்க, உங்களை மாதிரியேதான் நம்ம வள்ளுவப்பெருந்தகை சொல்கிறார். ஆனால், அவர் பேராசான் இல்லையா அவர் பாணியே தனி. இதோ, அந்தக் குறள்:
“செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.” --- குறள் 26; அதிகாரம் – நீத்தார் பெருமை
செயற்கரிய செய்வார் பெரியர் = (நாம எல்லாரும் ஒரே மாதிரி பிறந்திருந்தாலும், சின்ன சின்ன விஷயங்களை செய்யாம) பெரிய விஷயங்களை செய்றவங்க பெரியார்; செயற்கரிய செய்கலா தார் சிறியர் = (அல்ப விஷயங்களைச் செய்து) பெரிய விஷயங்களை தவிர்ப்பவர்கள் சிறியர்.
சின்ன விஷயங்கள் என்றால் புலன் வழி நம்மை செலுத்துவது. அதற்கு காரணம் பேராசை, பெருங்கோபம் முதலியன.
பெரிய விஷயங்கள் என்பது இயமம், நியமம் முதலியன.
அதை நீத்தார்கள் செய்வதால் அவர்களின் பெருமை உயர்ந்தது.
சரி, நாம அங்கே போகமுடியுமா? முடியும். ரொம்பவே சுலபம். செய்யக் கூடாததை செய்யாதீங்க, செய்ய வேண்டியதை செய்ங்க. அதாங்க இயமம், நியமம். பெரியார் ஆயிடலாம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments