02/03/2024 (1092)
அன்பிற்கினியவர்களுக்கு:
இந்தப் பசப்பு அவர் தந்தனால் என் மேல் அவர் போலவே ஊறுகிறதோ? என்றவள் மேலும் தொடர்கிறாள். என்னவர் எப்படித் தெரியுமா?
தோழி: நீயே சொல்லடியம்மா!
அவள்: என்னிடம் இருந்து இரண்டனை எடுத்துக் கொண்டு அதற்குப் பதிலாக இரண்டினைக் கொடுத்துச் சென்றுள்ளார்.
தோழி: ஆங் … என்ன சொல்கிறாய்?
அவள்: எனக்குக் காம நோயையும், இந்தப் பசலை படர்தலையும் தந்தார். என்னிடமிருந்த இயல்பான நாணமும், என் மேனி அழகும் காணாமல் போய்விட்டன. அவற்றை அவர்தாம் எடுத்துச் சென்றிருக்கிறார்.
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. – 1183; - பசப்புறு பருவரல்
எதிர் நிரல் நிரை அணி: சாயலும் நாணும் – நோயும் பசலையும்
முதல் அடியில் உள்ள “சாயலும்” என்பதற்கு ஈடாகப் “பசலையும்” என்ற சீர் இரண்டாம் அடியில் முதலில் வந்திருக்க வேண்டுமாம்.
அது போலவே, முதல் அடியில் உள்ள “நாணும்” என்ற சொல்லுக்கு இரண்டாம் அடியில் “நோயும்” என்ற சீர் வந்திருக்க வேண்டுமாம், அவ்வாறில்லால் மாறி இடம் பெற்றுள்ளதனை எதிர் நிரல் நிரை அணி அல்லது மயக்க நிரல் நிரை அணி என்று சொல்கிறார்கள்.
பசலையும் நோயும் தந்து = என் உடல் முழுவதும் படர்ந்திருக்கும் பசலையையும், காமமென்னும் நோயையும் தந்து; கைம்மாறா = அவற்றுக்குப் பதிலாக; சாயலும் நாணும் அவர்கொண்டார் = என் அழகினையும் எனக்கு இயல்பாக இருந்த நாணத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
என் உடல் முழுவதும் படர்ந்திருக்கும் பசலையையும், காமமென்னும் நோயையும் தந்து, என் அழகினையும், எனக்கு இயல்பாக இருந்த நாணத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.
தோழி: கற்பனைக்கு அளவில்லை. அடுத்து என்னவெல்லாம் சொல்லப் போகிறாயோ?
நாளைத் தொடர்வோம், நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments