31/03/2021 (73)
மேதினியில் மரண மில்லை!
நம்மாளு: ஐயா, குற்றங்கள் ஆறுன்னு சொன்னீங்களே அதை கொஞ்சம் சொல்லுங்க.
ஆசிரியர்: நன்று. அதை இன்றைக்கு பார்த்துடலாம். அன்றைக்கு, மனதிலே தோன்றும் குற்றங்கள் பெரும்பாலும் காமம், கோபம், கடும் பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என ஆறு வகைப்படும்னு பார்த்தோம்.
இந்த ஆறினுள், வள்ளுவப்பெருந்தகை செருக்கை முன்னாடி வைக்கிறார். ஏன் என்றால், இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு நல்ல நிலை எய்தும் போது முதலில் வந்து ஒட்டிக்கொள்வது செருக்கு தான். செருக்கும், மிடுக்கும் வேணுமான்னு கேட்டா ஒர் அளவுக்கு நிச்சயமாக வேண்டும். செருக்கு என்ன செய்யும் என்றால் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். எதையும் செய்யலாம் எப்படியும் செய்யலாம்னு தோணும். நம்மாலே முடியாதான்னு நினைக்கும். முயற்சி பண்ணும். அடைய முடியாதது போல இருந்தா எந்த வழியா இருந்தாலும் பரவாயில்லை நாம மட்டும் தோற்கக் கூடாதுன்னு இறங்கும்!
அந்த சுழலில் கொஞ்சம் கொஞ்சமா சிக்கி என்ன நடக்குதுன்னு தெரியாமலே கீழே அழுத்திடும். செருக்கு எதனாலயும் வரலாம். செருக்கு வருவதற்கு செல்வச் செழிப்பு மட்டும் காரணமில்லை. அதை விட மோசமானது ‘கல்விச்செருக்கு’. உனக்கு என்னாடா தெரியும், நான் இதை படிச்சிருக்கேன் அதைப் பார்த்திருக்கேன்னு அலம்பும்! தற்பெருமை பேசும், இறுமாப்பா இருக்கும், கால் மேல கால் போட்டு உட்கார்ந்துக்கும், காலுக்கு கிழே நழுவறது தெரியாம!
தவறும் போது பயம் வரும். பயமும் சினமும் இரட்டைப்பிறவி. பயத்தின் வெளிப்பாடுதான் கோபம். கோபம், நம்ம கட்டுப்பாட்டை இழக்க வைக்கும். மேலும் கீழான காரியங்களை செய்ய வைக்கும்.
அவசர, அவசரமாக மகாகவி பாரதி சொல்றாரு: மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம், கோவத்தை அடக்குங்கறார்.
“அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன்; சினத்தை முன்னே வென்றிடுவீர்,
மேதினியில் மரண மில்லை;” – மகாகவி பாரதி
ரொம்ப ஆழமான கவிதை இது. நேரம் வாய்த்தால் படிக்கலாம்
குறளைப் பார்க்கலாம்:
“செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து.” ---குறள் 431; அதிகாரம் - குற்றங்கடிதல்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் = செருக்கு, கோபம், கீழான பேராசை முதலான செயல்கள் இல்லாதவர்கள்; பெருக்கம் பெருமித நீர்த்து = பெறும் வளர்ச்சி சிறப்பினை கொடுக்கும் தன்மை உடையது
இது இல்லறத்தானுக்கு மட்டுமில்லை, துறவிக்கும் இதையே சொல்லியிருக்காராம் இன்னொரு குறளில். கண்டுபிடிக்கலாம் வாங்க!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments