23/05/2024 (1174)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஊரின் நடுவில் ஒரு மரம். அந்த மரத்தினில் பழுத்துத் தொங்கும் பழங்கள். ஆனால் என்ன? ஒவ்வொரு பழமும் நச்சு! அந்தப் பழங்களினால் ஆபத்துதானேதவிரப் பயன் இல்லை. அஃதே நச்சப் படாதவன் செல்வம்.
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்தற்று. – 1008; - நன்றியில் செல்வம்
நச்சப்படாதவனின் செல்வம் = வறியவர் தமக்கு ஈயாமல் இருப்பதனால் பிறரால் விரும்பப்படாதவனின் செல்வம்; நடு ஊருள் = மக்கள் நிறைந்திருக்கும் ஊரின் நடுவில்; நச்சு மரம் பழுத்தற்று = நச்சு நிறைந்த மரம் பழுத்துக் குலுங்கி பாதிப்பினை ஏற்படுத்துவது போல.
வறியவர் தமக்கு ஈயாமல் இருப்பதனால் பிறரால் விரும்பப்படாதவனின் செல்வம், மக்கள் நிறைந்திருக்கும் ஊரின் நடுவில், நச்சு நிறைந்த மரம் பழுத்துக் குலுங்கி பாதிப்பினை ஏற்படுத்துவது போல.
ஈயார் தேட்டைக் தீயார் கொள்வர் – பாடல் 4; ஔவையார் அருளிய கொன்றைவேந்தன்
வறியவர்களுக்குக் கொடுத்து உதவாது பதுக்கி வைத்திருக்கும் செல்வத்தினைத் தீய எண்ணம் கொண்டவர்கள்தாம் திருடிக் கொண்டு செல்வர். அந்தச் செல்வம், மேலும், தீயச் செயல்களை மட்டுமே ஊக்குவிக்கும்.
எனவே அந்த நச்சப் படாதவர்களின் செல்வத்தினை ஊருக்குள் இருக்கும் நச்சு மரம் பழுத்தது போல என்றார் நம் பேராசான். இந்தக் கருத்தினை அடுத்தப் பாடலில் தெளிவாக்குவார்.
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். – 1009; - நன்றியில் செல்வம்
அன்பு ஒரீஇ = அன்பு இல்லாமலும்; தற் செற்று = தமக்கும் பயன் இல்லாமல் தம்மையும் அழித்துக் கொண்டு; அறம் நோக்காது = செய்ய வேண்டிய நல்ல செயல்களைச் செய்யாமலும், செய்யக் கூடாதனவற்றை விலக்காமலும்; ஈட்டிய ஒண்பொருள் = எல்லாவற்றிலும் செல்வத்தைக் குவிப்பது மட்டுமே மிக முக்கியம் என்று ஈட்டிய அந்தப் பெருஞ்செல்வத்தினை; பிறர் கொள்வார் = தீயார் கொள்வர்.
வறியவர் மேல் அன்பு செலுத்தாமலும், தமக்கும் பயன் இல்லாமல் தம்மையும் அழித்துக் கொண்டு, செய்ய வேண்டிய நல்ல செயல்களைச் செய்யாமலும், செய்யக் கூடாதனவற்றை விலக்காமலும், எல்லாவற்றிலும் செல்வத்தைக் குவிப்பது மட்டுமே மிக முக்கியம் என்று ஈட்டிய அந்தப் பெருஞ்செல்வத்தினைத் தீயார் கொள்வர்.
நன்றியில்லாத செல்வத்தினால் தீமையைத் தவிர வேறில்லை. அது எப்போதும் நல்லதொரு பயனை விளைவிக்காது என்கிறார்.
இந்த அதிகாரத்தின் முடிவுரையாக ஒரு கருத்தினை அழுத்திச் சொல்கிறார்.
நன்றியில் செல்வத்தினால் பயன் இல்லை என்று சொன்னவர், நன்றியுடைச் செல்வத்தின் தன்மையினைச் சொல்கிறார்.
அஃதாவது, கரு மேகமானது கொட்டித் தீர்த்த உடன் நீரற்றுப் போவதனைப் போல, அற வழியில் செல்வத்தினை ஈட்டியவர்கள் கொடுத்துக் கொடுத்து பொருள் இல்லா நிலைக்கும் போகலாம். ஆனால், அந்த மேகங்கள் மீண்டும் உடனே எப்படிச் சூல் கொள்ளுமோ அவ்வாறே அவர்களும் மீண்டும் உயர்ந்த நிலை எய்தி கொடுத்துக் கொண்டே இருப்பர்.
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. – 1010; - நன்றியில் செல்வம்
துனி = துன்பம், வெறுப்பு; மாரி = மழை, மேகம்; வறங்கூர்ந்து = வறண்டு;
சீர் உடைச் செல்வர் சிறு துனி = நல்ல வழியில் செல்வத்தினை ஈட்டி அறம் செய்து ஒழுகுபவர்கள் சில நேரம் செல்வம் இல்லாமல் துன்பம் அடையலாம்; மாரி வறங்கூர்ந்து அனையது உடைத்து = அஃது எத்தகையது எனின் வாரி வழங்கும் கரு மேகங்கள் சில பொழுது வறண்டு போவதனைப் போல.
நல்ல வழியில் செல்வத்தினை ஈட்டி அறம் செய்து ஒழுகுபவர்கள் சில நேரம் செல்வம் இல்லாமல் துன்பம் அடையலாம். அஃது எத்தகையது எனின் வாரி வழங்கும் கரு மேகங்கள் சில பொழுது வறண்டு போவதனைப் போல.
அவை மீண்டும் சூல் கொண்டு வாரி வழங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments