30/07/2023 (878)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
தலைமைக்குச் செல்வங்களாவன படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று இறைமாட்சி (39 ஆவது) அதிகாரத்தின் முதல் குறளில் சொன்னார். அதை மேலும் தனித்தனியாக சொல்லிக் கொண்டுவருகிறார். படையைக் குறித்து படை மாட்சி (77 ஆவது), படைச் செருக்கு (78 ஆவது) என்னும் இரண்டு அதிகாரங்களில் சொன்னார்.
குடி அதாவது நாட்டைக் குறித்து சிறப்பாக நாடு என்னும் (74 ஆவது) அதிகாரத்திலும், நாட்டிற்குப் பாதுகாப்பான அரணைப் பற்றி அரண் (75 ஆவது) அதிகாரத்திலும் சொன்னவற்றையும் நாம் பார்த்துள்ளோம்.
கூழ் அதாவது செல்வங்களைக் குறித்து பொருள் செயல் வகை என்ற (76 ஆவது) அதிகாரத்தில் ‘செய்க பொருளை’ என்று சொன்னதையும் நாம் பார்த்தோம்.
அதேபோன்று தலைமைக்குத் தக்கதை எடுத்துரைக்க வல்லவர்களான அமைச்சர்களைப் பற்றி அமைச்சு என்னும் (64 ஆவது) அதிகாரத்தில் தொடங்கி அவையஞ்சாமை (73 ஆவது) உள்ளிட்ட அதிகாரங்களில் சொன்னவற்றையும் நாம் சிந்தித்தோம்.
நட்பினைக் குறித்து நட்பு (79 ஆவது), நட்பாராய்தல் (80 ஆவது) ஆகிய அதிகாரங்களில் சொன்னவர், நட்பை மேலும் அடுத்துவரும் அதிகாரங்களில் விரிக்கிறார். அதில், பழைமை (81 ஆவது), தீ நட்பு (82 ஆவது) அதிகாரங்களையும்கூட நாம் சிந்தித்துள்ளோம்.
இதனைத் தொடர்ந்து, கூடா நட்பு (83 ஆவது) அதிகாரத்தில் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.
“கூடா நட்பு கேடாய் முடியும்” என்பது பழமொழி. அது என்ன கூடாநட்பு? சந்தர்ப்பவாதமும் சுயநலமும் கொண்ட நட்புதான் கூடா நட்பு. அவர்களுக்கு மனத்தளவில் நட்பிருக்காது. பார்வைக்கு நண்பர்களாக வலம் வருவார்கள்; தங்கள் வேலை முடியும்வரை! இவர்களையும் தீ நட்பு போல விலக்க வேண்டும் என்பதால் அதற்கு அடுத்த அதிகாரமாக வைத்துள்ளார்.
கூடா நட்பானது நம்மை சம்மட்டியால் அடித்துப் பார்க்க சரியான வாய்ப்பைத் தேடி நிற்குமாம். வாய்ப்பு வந்தால் நிச்சயம் இடி உண்டு என்கிறார்.
முதல் குறளிலேயே எச்சரிக்கை செய்கிறார்.
பட்டடை (anvil) என்றால் அடைகல். அது என்ன அடைகல்? இது கொல்லர்களின் பட்டறைகளில் இருக்கும் ஒரு உபகரணம். இதன் மேல்தான் நன்கு காய்ச்சியக் கம்பிகளை வைத்து அடித்து, அடித்து தமக்குத் தேவையானவற்றை செய்வார்கள்.
அந்தக் கல்லை அடைந்துவிட்டால் அடிதான். அதுவும் சம்மட்டி அடி!
அதைப்போல, கூடா நட்பு என்பது நம்மைச் சூடேற்றி தக்க தருணத்தில் பட்டடையில் அமர வைப்பார்கள். நாமும், பரவாயில்லையே நம்மை இப்படித் தாங்குறார்களே என்று நினைப்பதற்குள் அடி விழும். அடித்து அடித்து அவர்களுக்குத் தேவையானதைச் செய்துகொள்வார்கள்.
அதாங்க, வைத்து செய்வார்கள்!
“சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.” --- குறள் 821; அதிகாரம் – கூடா நட்பு
சீர் இடம் = சரியானத் தருணம்; காணின் = வாய்த்தால்; எறிதற்குப் பட்டடை = அடித்து தேவையானதைச் செய்து கொள்ளும் அடைக்கல்லைப் போல; நேரா = உள்ளுக்குள் அன்பு இல்லாமல்; நிரந்தவர் நட்பு = வெளியே, தன் வாய்ப்பு வரும் வரை நண்பனைப்போல் இருப்பவர்களின் நட்பு.
சரியானத் தருணம் வாய்த்தால் அடித்து தேவையானதைச் செய்து கொள்ளும் அடைக்கல்லைப் போல உள்ளுக்குள் அன்பு இல்லாமல், வெளியே, தன் வாய்ப்பு வரும் வரை நண்பனைப்போல் இருப்பவர்களின் நட்பு.
உட்கார வைத்து உரு குலைத்து விடுவார்கள்! கவனம் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments