top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

செறாஅச் சிறுசொல்லும் ... 1097

13/09/2021 (202)

இன்றைக்கு ஒரே படபடப்பு. நல்லாதானேடா இருந்தா? என்ன ஆச்சு? என்னைப் போய் யார் நீங்கன்னு கேட்கறா, அதுகூட பரவாயில்லை, என்னைப் பார்க்கிற வேலையெல்லாம் வைச்சுக்காதீங்கன்னு வேற மிரட்டுகிறாள். வேற ஏதேதோ சொல்கிறாள். எனக்கு ஒன்றுமே புரியலை.


நாளைக்கு சந்திப்போம்ன்னுதான் நேற்று சொன்னாள். ஆனா, இன்றைக்கு ஏன் இந்த மாற்றம். அண்ணனுக்கு எதுவுமே ஓடலை. தம்பியையும் காணோம். அவன் வந்தா என்னன்னு கேட்கலாம். அவன் சமயத்துக்கு வரமாட்டான். வந்தாலும் கேலிதான் பேசுவான்.


இப்படியாக அண்ணன் தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது தான் தம்பி வருகிறான்.


அண்ணே, என்ன ஆழ்ந்த யோசனை? கற்பனை குதிரையை தட்டி விட்டீங்களா? எந்த உலகத்திலே இருக்கீங்க? உங்களை இப்போதெல்லாம் சாதாரண நிலையிலே பார்க்கவே முடிவதில்லை.


அட நீ வேறடா. நானே நொந்து போய் இருக்கேன். உனக்கு என் நிலைமை தெரியலை.


என்ன ஆச்சுன்னே? தெளிவாக சொல்லுங்க.


அண்ணன் அவர் செய்தியை விவரித்துவிட்டு, என்ன பன்றதுன்னு தெரியலைடா, நீ வந்தா ஏதாவது சொல்ல மாட்டியான்னுதான் உட்கார்ந்து இருக்கேன். நீ என்னடான்னா எப்பவும் கிண்டல் பண்ணுகிறாய். போடா, ஏதாவது இருந்தா சொல்லு இல்லையென்றால் கிளம்புன்னு வெடிக்கிறார் அண்ணன்.


கவலையை விடுங்க அண்ணே. முடிவாயிடுச்சு. உங்களுக்குதான் குறிப்பு தெரியலை.


என்னடா குறிப்பு அது? சொல்லு சீக்கிரம்.


இந்தக் குறளை படிங்க. உங்களுக்கே புரியும்.


செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.” ---குறள் 1097; அதிகாரம்–குறிப்பறிதல் (111)


செறாஅச் சிறுசொல்லும் = உள்ளே ஆசை இருக்க வெளியே வெடித்துப் பேசுவதும்; செற்றார்போல் நோக்கும் = சும்மா நடிப்பாக வெறுத்து இருப்பது போல் பார்ப்பதும்; உறாஅர்போன்று = தொடர்பில்லாதவர் போன்று; உற்றார் குறிப்பு = விரும்புபவர்கள் காட்டும் சிக்னல் – அதாங்க குறிப்பு.


அப்படியா சொல்லியிருக்கார் நம் பேராசான். இப்பதாண்டா புரியுது. அவ கூட அந்த பக்கத்து வீட்டு பொன்னு இருந்தா. அதான் செய்தி. நான் கொஞ்சம் அவசரப்பட்டேன். குறளை படிப்பதாலே இப்படி ஒரு பயன் இருக்கா? ம்ம்…


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.






7 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page