01/10/2023 (939)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நினைப்பவனைக் காப்பதுதான் மந்திரம். மன்+திரம் = மந்திரம்.
மனத்திண்மையாற் கருதியது நிறைவேறும் மொழி மந்திரம் என்கிறார் தேவநேயப் பாவாணப் பெருமானார்.
எது மந்திரம்?
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” --- செய்யுளியல், நூற்பா 1434; தொல்காப்பியம் (புலவர் வெற்றியழகனார் எளிய உரை)
நிறை மொழி மாந்தரின் ஆணையை எவ்வாறு அறிவது?
“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.” --- குறள் 28; அதிகாரம் – நீத்தார் பெருமை
நிறைந்த மொழியை உடைய துறந்தாரது பெருமையை இவ் உலகத்தில் அவர்கள் சொல்லிச் சென்றவையே கண்கூடாகக் காட்டும். காண்க 11/08/2021 (169).
அஃதாவது, அவர்களின் வாய்ச்சொல் காலம் கடந்தும் நிற்கும், நிலைக்கும். திருக்குறளே அதற்குச் சான்று!
நிறை மொழி மாந்தர் சொல்லிச் சென்ற அறக் கருத்துகளை அல்லும் பகலும் நினைத்தால் உய்யலாம், உயர்வு பெறலாம். மனத்துக்கண் மாசிலன் ஆகலாம். அதுதான் அனைத்து அறம் என்றார் நம் பேராசான் குறள் 34இல். காண்க 15/02/2021 (29).
சிலர் மூச்சைப் பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கி சாதனை செய்வார்கள். தவம் செய்கிறேன் என்பார்கள். அந்தத் தோற்றத்தைக் கண்டு ஏமாந்துவிடக் கூடாது என்கிறார் நம் பேராசான். அவர்களின் மனத்தில் அழுக்கும் குப்பையும்தான் நிறைந்திருக்கும். என்ன செய்வது? அவ்வாறுதான் பலர் இருக்கிறார்கள் என்கிறார். அவர்கள் சொல்லும் சொல்லில் உள்ள உண்மைத் தன்மையையும் நடுவுநிலைமையும் நாம்தாம் கண்டு கொள்ள வேண்டும்.
“மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.” --- குறள் 287; அதிகாரம் – கூடா ஒழுக்கம்
மாசு மனத்தது ஆக = குற்றமுள்ள எண்ணங்களை மனத்தில் வைத்துக் கொண்டு; மாண்டார் நீர் ஆடி = பெரிய தவமியற்றும் முனிவன் போல முச்சைப் பிடித்துக் கொண்டு மூழ்கி எழுபவர்களில்; பலர் மறைந்து ஒழுகு மாந்தர் = பலர் மறைவில் அறமற்றச் செயல்களைச் செய்பவர்களாக இருக்கக் கூடும்.
குற்றமுள்ள எண்ணங்களை மனத்தில் வைத்துக் கொண்டு பெரிய தவமியற்றும் முனிவன் போல முச்சைப் பிடித்துக் கொண்டு மூழ்கி எழுபவர்களில் பலர் மறைவில் அறமற்றச் செயல்களைச் செய்பவர்களாக இருக்கக் கூடும்.
அஃதாவது, மனம், சொல், செயல் எல்லாம் அறமென்னும் நேர் கோட்டில் அமைந்து நடுவுநிலைமையோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒரு தலையாய் உள்ளத்திலிருந்தே நடுவுநிலைமை அமையாவிட்டால், சொல்லிலும் (செயலிலும்) நடுவு நிலைமையை எவ்வாறு எதிர்ப்பார்க்க முடியும் என்று கேட்கிறார்.
“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.” --- குறள் 119; அதிகாரம் – நடுவுநிலைமை
செப்பம் = நடுவுநிலைமை(யை); ஒருதலையா = ஒரே குறிக்கோளாய்; உட்கோட்டம் இன்மை பெறின் = உள்ளத்தில் வளைதல் இன்றி அமைந்துவிட்டால்; சொற்கோட்டம் இல்லது = சொல்லில் நேர்மை இல்லாமல் போகாது.
நடுவுநிலைமையை ஒரே குறிக்கோளாய் உள்ளத்தில் வளைதல் இன்றி அமைந்துவிட்டால் சொல்லில் நேர்மை இல்லாமல் போகாது. செயலும் அதன் வழியே செல்லும் என்றவாறு.
நம்மாளு: ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் ...
ஆசிரியர்: புரியுது. நாளைக்குத் தெளிவு பிறக்கும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments