27/11/2022 (633)
யானைக் காதிலே எறும்பு புகுந்தால் என்ன ஆகும்?
யானை நிதானம் இழக்கும். அதற்கு மதம் பிடிக்கும்.
அப்புறம்?
ஊருக்குள் இருந்தால் எப்படியாவது அதை அடக்கிவிடுவார்கள்!
அதுவே காட்டுக்குள் இருந்தால் இங்கே, அங்கே முட்டி மோதி ஒரு நிலைக்கு வர வேண்டியதுதான்.
அதைத் தவிர்க்கத்தான் யானையார் தன் காதுகளை எப்போதும் ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.
எறும்பு சின்னதுதான். ஆனால் அது யானையின் பலத்தை சோதனைக்கு உள்ளாக்கும்.
இந்த செய்தியை ஒரு அம்மா யானை தன் குட்டி யானைக்கு சொல்லி கவனமாக இருக்கனும் கண்ணு, சரியான்னு சொன்னதாம். இளம் யானையில்லையா அதற்கு சிரிப்புதான் வந்ததாம். ஒரு மிதி மிதித்தால் காலியாயிடும் எறும்புக்கு அம்மா ரொம்பவே பயப்படுது. வயசாயிடுச்சு. இருக்கட்டும் இந்த எறும்புகளை என்ன பண்றேன் பாருங்கன்னு காத்திருந்ததாம்.
அந்த சின்ன யானை ஒரு நாள் வயல் ஓரம் ஒரு எறும்புக் கூட்டத்தை பார்த்ததாம். இன்றைக்கு அதுங்களை மிதித்து காலி பண்றேன் பாருன்னு வேகமா ஓடிப்போய் அந்த எறும்புகளை மிதிச்சுதாம்.
‘அம்மா’ன்னு ஒரு பெரிய சத்தம். எறும்புகள் எல்லாம் சேர்ந்து அவ்வளவு பெரிய சத்தமா போடுதுன்னு போய் பார்த்தால் அங்கே யானை வழுக்கி சேறுக்குள்ளே மாட்டிடுச்சாம்.
நமக்குத்தான் தெரியுமே குறள் 500ல் “கால்ஆழ் களரில் நரி அடும்” ன்னு நம்ம பேராசான் சொன்னது. அந்த யானையின் கதியை கவனம் வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
சிறுபடை அதற்கு ஏற்ற களத்தில் இருக்கும்போது, அந்த சமயத்திலே சண்டைக்குச் சென்றால், நம்மிடம் எவ்வளவு பெரிய படை இருந்தாலும் நமக்குத்தான் அழிவாம்.
“சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.” --- குறள் 498; அதிகாரம் – இடனறிதல்
சிறுபடையான் செல்லிடம் சேரின் = நம்மால் அழிக்கக்கூடிய அளவிற்கு சிறிய படையாக இருந்தாலும் அந்தப் படை அதற்கு சாதகமான இடத்தில் இருக்குமானால்; உறுபடையான் ஊக்கம் அழிந்துவிடும் = நமது படை பெரிய படையாக இருந்தாலும் அதனை சோதனைக்கு உள்ளாக்கும்.
நம்மால் அழிக்கக்கூடிய அளவிற்கு எதிரியின் படை சிறிய படையாக இருந்தாலும் அந்தப் படை அதற்கு சாதகமான இடத்தில் இருக்குமானால், நமது படை பெரிய படையாக இருந்தாலும் அதனை சோதனைக்கு உள்ளாக்கும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்...
உங்கள் அன்பு மதிவாணன்
Comentarios