19/07/2023 (867)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இது வரை, ஒரு படைக்கு, எது எது இருக்க வேண்டும் என்று கூறினார். குறிப்பாக மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம் என்ற நான்கும் தேவையானவை என்று குறள் 766 இல் சொன்னார்.
குறள் 769 இல் எவையெல்லாம் இருக்கக் கூடாது என்று கூறுகிறார்.
முதலில் இழி குணங்கள் இருக்கக் கூடாதாம்; அடுத்து, மனத்திலே நீங்கா வெறுப்பு உணர்ச்சி கூடவே கூடாதாம்!
அதற்கு அடுத்து ஒன்று சொல்கிறார். அதுதான் சற்று விளங்க வேண்டியதாக உள்ளது. அதாவது, வறுமை இருக்கக் கூடாது என்கிறார்.
படைக்கு எதில் வறுமை, ஏன் வறுமை இருக்கக் கூடாது?
இழி குணங்களும், நீங்கா வெறுப்பும் மனத்துடன் தொடர்புடையது. இந்த இரண்டினைச் சொல்லி மூன்றாவதாக வறுமை என்று சொன்னால் அதுவும் மனத்தின்கண் தொடர்புடையதாக இருக்கலாம்.
வறுமை என்றால் இல்லாமை என்பது நம் அனைவருக்கும் தெரிந்தப் பொருள். அதிலும் முக்கியமாக பணம் முதலானச் செல்வக் குறைவை வறுமை என்கிறோம்.
வறுமை என்றால் வெறுமை என்றும் பொருள். அதாவது, மனத்தில் வெல்ல வேண்டும் என்ற எழுச்சி இருக்க வேண்டும், அது இல்லாமல், என்னத்த செஞ்சு என்னத்த சாதிக்கப் போகிறோம் என்ற வெறுமை இருக்கக் கூடாது. இந்த மூண்றினைத்தான் கீழ் வருமாறு சொல்கிறார்:
“சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.” --- குறள் 769; அதிகாரம் – படை மாட்சி
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் = இழி குணங்களும், நீங்காத வெறுப்புணர்வும், மனத்தில் வெறுமையும் இல்லாயின்; படை வெல்லும் = அந்தப் படை வெல்லும் படையாக அமையும்.
இழி குணங்களும், நீங்காத வெறுப்புணர்வும், மனத்தில் வெறுமையும் இல்லாயின் அந்தப் படை வெல்லும் படையாக அமையும்.
வறுமை என்பதற்கு செல்வக் குறைவு அல்லது நல்குரவு என்றும் அறிஞர் பெருமக்கள் பொருள் கண்டுள்ளார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments