top of page
Search

செற்றார் எனக்கை விடலுண்டோ ... 1245, 1255, 1246, 05/04/2024

05/04/2024 (1126)

அன்பிற்கினியவர்களுக்கு:

நெஞ்சே நீ அவரைக் காணச் செல்வதென்றால் இந்தக் கண்களையும் உடன் அழைத்துச் செல் என்றாள் குறள் 1244 இல்.

 

நான் செல்லமுடியாத காரணத்தால் நீயாவது சென்று, கண்டுவர மாட்டாயா என்கிறாள்.

 

செற்றார் என்றால் நம்மிடம் அன்பில்லாதவர், நம்மைத் தவிர்ப்பவர் என்று பொருள்படும். நிறையழிதல் என்ற அதிகாரத்தில் இருந்து ஒரு பாடலை நாம் சிலமுறை சிந்தித்துள்ளோம். காண்க 10/03/2022. மீள்பார்வைக்காக:

 

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்

உற்றார் அறிவதொன் றன்று. - 1255; - நிறையழிதல்

 

நம்மை வேண்டாம் என்று சொல்பவர்கள் பின் மீண்டும் செல்லாமல் இருப்பதுதான் கெத்து. ஆனால், அன்பிலே கட்டுண்டவர்களுக்கு அந்தக் கெத்து தெரியாது.

 

அன்பிலே கட்டுண்டவர்கள் பிரிவதில்லை. அவர்கள் ‘நான்’ என்னும் அகங்காரம் பார்ப்பதில்லை. அவளின் நெஞ்சத்திற்கு சொல்கிறாள்!

 

செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்

உற்றால் உறாஅ தவர். – 1245; - நெஞ்சொடு கிளத்தல்

 

நெஞ்சே யாம் உற்றால் உறாதவர் = நெஞ்சே, நாம் அவர்மேல் அன்பினால் கட்டுண்டு கலங்கி நின்றபோதும் நம் நிலையைச் சிறிதும் கண்டு கொள்ளாமல் அவர் சென்றுவிட்டார்; செற்றார் எனக் கைவிடல் உண்டோ = எனவே, அவரைச் ‘செற்றார்’ அஃதாவது, அன்பில்லாதவர் என்று சொல்லமுடியுமா?

 

நெஞ்சே, நாம் அவர்மேல் அன்பினால் கட்டுண்டு கலங்கி நின்றபோதும் நம் நிலையைச் சிறிதும் கண்டு கொள்ளாமல் அவர் சென்றுவிட்டார். எனவே, அவரைச் ‘செற்றார்’ அஃதாவது, அன்பில்லாதவர் என்று சொல்லமுடியுமா? என்று வினவுகிறாள்!

 

இவ்வளவு சொல்லியும், நெஞ்சே, நீ ஏன் விரைந்து சென்று அவரைக் காணாமல், அவரை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருப்பது ஏன்?

 

அவரை நேரில் கண்டால் அவரைக் கடியாமல் அந்தக் கணத்திலே அவருடன் ஒன்றிவிடுகிறாய். அவர் அருகில் இல்லாத பொழுது அவர் அன்பில்லாதவர் என்று பொய்யாக அவரின் மேல் கோபம் கொள்கிறாய்! நீ விசித்திரமானவள்!

 

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு. – 1246; - நெஞ்சொடு கிளத்தல்

 

 

என் நெஞ்சே கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் = என் நெஞ்சே, அவரை நேரிலே காணும் பொழுது அவரின் தழுவலில் மெய் மறக்கிறாய். அவரின் அன்பில்லாத செயல்களைச் சுட்டிக்காட்டி பொய்யே ஆயினும் அவரோடு ஊடல் செய்ய நினப்பதில்லை; பொய்க் காய்வு காய்தி = ஆனால், இப்பொழுதோ, அவரை அன்பற்றவர் என்று குறை சொல்கிறாய். இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

 

என் நெஞ்சே, அவரை நேரிலே காணும் பொழுது அவரின் தழுவலில் மெய் மறக்கிறாய். அவரின் அன்பில்லாத செயல்களைச் சுட்டிக்காட்டி பொய்யே ஆயினும் அவரோடு ஊடல் செய்ய நினப்பதில்லை. ஆனால், இப்பொழுதோ, அவரை அன்பற்றவர் என்று குறை சொல்கிறாய். இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? பொய்யாக நடிக்கிறாயா? என்று வினவுகிறாள்.

 

ஏதோ, அவளின் நெஞ்சமும் அவளும் வேறு வேறு என்பதுபோல அவள் நெஞ்சோடு உரையாடிக் கொண்டிருக்கிறாள்!

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page