19/12/2022 (655)
“செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்” பாடல் 3; நறுந்தொகை என்ற வெற்றிவேற்கை; அதிவீரராம பாண்டியர்.
செல்வம் உடையவர்களுக்கு அழகு கிளைஞரைத் தாங்குதல். அதாவது, சுற்றத்தை அரவணைத்துப் போதல்.
இது நிற்க.
சுற்றத்திற்கும் செல்வத்திற்கும் சம்பந்தம் இருக்காம். முதல் குறளில் (521) “பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்...” என்றார். அதாவது, செல்வம் நீங்கிய போதும் பழமையைப் பாராட்டுதல் சுற்றத்தார் இயல்பு என்று இயல்பினைக் கூறினார்.
சுற்றம் தழால் இருக்கே அதுவே செல்வம் வருவதற்கு ஏதுவாக இருக்குமாம்; அதுவே வந்த செல்வத்திற்கு பாதுகாப்பாக இருக்குமாம்; மேலும் அதுவே பயனாகவும் இருக்குமாம். அதாவது, சுற்றந்தழால் மேலும் வளரக் காரணமாக இருக்குமாம். சுற்றத்தை நம்மோடு தொடர்ந்து இணைத்து வைக்குமாம்.
அடுத்து வரும் இரண்டு குறள்களும் நாம் ஏற்கனவே பார்த்ததுதான். மீள்பார்வைக்காக காண்க 28/04/2021 (101).
“விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.” --- குறள் 522; அதிகாரம் - சுற்றந்தழால்
விருப்புஅறாச் சுற்றம் = அன்பு அகலாச் சுற்றம்; இயையின் = அமைந்துவிட்டால்; அருப்பு அறா = அரும்புதல் அகலா, கிளைத்தல் அகலா, (என்றென்றும் பரந்து விரியும்); ஆக்கம் பலவும் தரும் = செல்வம் பலவும் தரும்
“அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.” --- குறள் 523; அதிகாரம் - சுற்றந்தழால்
அளவளாவு = அன்பொடு நெஞ்சம் கலந்து உறவாடும் தன்மை; இல்லாதான் வாழ்க்கை = இல்லாதாவனின் வாழ்க்கை; குள(ம்) = குளத்தின்; வளா = பரப்பு; கோடு = கரை, குளவளாக்கோடின்றி = தடுப்புக் கரையில்லா குளத்தில்; நீர்நிறைந் தற்று = நீரை நிரப்புவது போல
குறள் 522ல் சுற்றம் செல்வம் தரும் என்றார்; குறள் 523ல் சுற்றமே வந்த செல்வத்திற்கு அரணாக இருக்கும் என்றார். குறள் 524ல் செல்வமும், சுற்றமும் ஒன்றிற்கு ஒன்று பயனாக இருக்கும் என்கிறார்.
“சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.” --- குறள் 524; அதிகாரம் – சுற்றந்தழால்
பெற்றத்தால் = பெற்ற அதனால்; செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் = செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாவது; சுற்றத்தால் தான் சுற்றப் பட ஒழுகல் = தன் சுற்றத்தால் தான் சூழப்பட்டு வாழ்வதற்கு வழி வகுக்கும்.
செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாவது; தன் சுற்றத்தால் தான் சூழப்பட்டு வாழ்வதற்கு வழி வகுக்கும்.
(நாம் பார்த்துக் கொண்டிருப்பது “பொருட்பால்” என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)
கற்றதனால் ஆய பயன் என்பதுபோல செல்வம் பெற்றதனால் ஆய பயன் சுற்றந்தழால் என்று எடுத்துக் கொள்ளலாம். சுற்றம் பேணவில்லை என்றால் செல்வத்திற்கு எந்தப் பயனும் இல்லை.
பரிமேலழகப் பெருமானின் வரிகளில்: “இவை மூன்று பாட்டானும் சுற்றந்தழால் செல்வத்திற்கு ஏதுவும், அரணும், பயனும் ஆம் என்பது கூறப்பட்டது”
அதாவது, மேற்கண்ட 522, 523, 524 குறள்களின் மூலம் சுற்றந்தழால் செல்வத்திற்கு வழி, பாதுகாப்பு, பயன்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments