top of page
Search

செற்றவர் பின்சேறல் ... 1256, 11/04/2024, 1257

11/04/2024 (1132)

அன்பிற்கினியவர்களுக்கு:

பித்துப் பிடிக்கிறதே, நான் என்ன செய்வேன் என்கிறாள். இது என்ன பைத்தியக்காரத்தனம்? என்னை ஒரு பொருட்டாக எண்ணாமல் இதுவரை பிரிந்திருக்கிறாரே, அவரின் பின்னால் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறேனே, என் துன்பம் எத்தகையது என்று கழிவிரக்கம் கொள்கிறாள்.

 

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ

எற்றென்னை உற்ற துயர். – 1256; - நிறை அழிதல்

 

செற்றவர் பின் சேறல் வேண்டி = அன்பில்லாமல் சென்றவர் பின் செல்லும் வகையில் தள்ளப்படுகிறேனே; என்னை உற்ற துயர் எற்று அளித்து = என்னைத் தாக்கும் இந்தத் துன்பம் எத்தன்மைத்து? ஓஒ… மிகக் கொடியது.

 

அன்பில்லாமல் சென்றவர் பின் செல்லும் வகையில் தள்ளப்படுகிறேனே, என்னைத் தாக்கும் இந்தத் துன்பம் எத்தன்மைத்து? ஓஒ… மிகக் கொடியது.

 

இருந்தாலும் …

 

அவர் வந்துவிட்டால் …

இந்த மட நெஞ்சம் இருக்கிறதே, அவர் வந்து கூடித் தழுவினால், அப்போதும் தன் நாணத்தைத் துறந்துவிடும்! இதற்கு நாணம் என ஒன்று இருந்தால்தான் என்ன? இல்லாவிட்டால்தான் என்ன?

 

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்

பேணியார் பெட்ப செயின். – 1257; - நிறை அழிதல்

 

பெட்ப = விரும்புவன; பேணியார் பெட்ப செயின் = முன்பு அன்புள்ளவர் போல இருந்து, பின் விலகி, மீண்டும் வந்து நாம் விரும்புவன செய்தால்;

காமத்தால் நாண் என ஒன்றோ அறியலம் = அந்த அன்பினால் நாணம் என ஒன்று இருந்ததையே மறந்துவிடும் இந்த வெட்கம் கெட்ட நெஞ்சம்!

 

முன்பு அன்புள்ளவர் போல இருந்து, பின் பிரிந்து, மீண்டும் வந்து நாம் விரும்புவன செய்தால், அந்த அன்பினால் நாணம் என ஒன்று இருந்ததையே மறந்துவிடும் இந்த வெட்கம் கெட்ட நெஞ்சம்!

 

மேலும் … என்னவெல்லம் செய்யும் இந்த நெஞ்சம் …

காதல் சிறகை காற்றினில் விரித்து

வான வீதியில் பறக்கவா..

கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்

கண்ணீர் கடலில் குளிக்கவா..

எண்ணங்களாலே பாலம் அமைத்து

இரவும் பகலும் நடக்கவா..

இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி

இரு கை கொண்டு வணங்கவா…

முதல் நாள் காணும் புதுமணபெண்போல்

முகத்தை மறைத்தல் வேண்டுமா…

முறையுடன் மணந்த கணவர்

முன்னாலேபரம்பரை நாணம் தோன்றுமா…


பரம்பரையாக இருக்கும் நாணம் என்ற ஒன்று இருக்குமா? என்கிறாள்.


பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்

போதுஅழுதால் கொஞ்சம் நிம்மதி..

பேசமறந்து சிலையாய் இருந்தால்

அதுதான் தெய்வத்தின் சன்னதி..

அதுதான் காதல் சன்னதி..

 

காதல் சிறகை காற்றினில் விரித்துவான வீதியில் பறக்கவா… கவியரசு கண்ணதாசன், பாலும் பழமும், 1961

 

அவளால் வான வீதியில் பறக்காமல் எப்படி இருக்க முடியும்?

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page