16/02/2023 (714)
ஒற்றாடலில் பத்தாவது குறள்: ஒற்றனைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்கிறார்.
அதுவும் எப்படி?
ஒற்றன் நமக்கு பல நன்மைகளைச் செய்கிறானே என்று அவனுக்கு ஊரறிய சிறப்புகள் செய்யக் கூடாதாம். அப்படிச் செய்தால், அவனை நாமே காட்டிக் கொடுத்தது போல் ஆகும் என்கிறார். அவன் குறிப்புகளால், தலைமை செய்த செயல்களும் வெளிப்பட்டுவிடுமாம்.
அதாவது, அவனுக்கும் தலைமைக்கும் இருக்கும் எந்த ஒரு தொடர்பும் வெளி உலகத்திற்கு தெரியக் கூடாது.
அவனுக்குச் செய்யும் நன்மைகளையும், உதவிகளையும் பிறர் அறியாமல் செய்ய வேண்டுமாம்.
“சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.” --- குறள் 590; அதிகாரம் – ஒற்றாடல்
ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க = ஒற்றர்களுக்குச் செய்யக்கூடிய சிறப்புகளை மற்றவர்கள் அறியச் செய்யாதீர்கள்; செய்யின் = செய்தால்;
மறை புறப்படுத்தான் ஆகும் = மறைவாக உள்ள ஒற்றனும், அவனால் நிகழ்ந்த நிகழ்வுகளும் வெளிப்படும். இது தவிர்க்கப்பட வேண்டியது.
ஒற்றர்களுக்குச் செய்யக்கூடிய சிறப்புகளை மற்றவர்கள் அறியச் செய்யாதீர்கள்; செய்தால்; மறைவாக உள்ள ஒற்றனும், அவனால் நிகழ்ந்த நிகழ்வுகளும் வெளிப்படும். இது தவிர்க்கப்பட வேண்டியது.
அதாவது ஒற்றர்களை நிர்வகிக்கும் முறையை கடைசி மூன்று குறள்களில் சொன்னார்.
அதாவது, ஒற்று சொன்னச் செய்திகளை மற்றொரு ஒற்று வைத்து உறுதி செய்ய வேண்டும்; ஒன்றுக்கு மூன்று வழிகளில் ஓற்று இருப்பது நல்லது என்றார்; ஒற்றினை பலர் அறியப் பாராட்டி காட்டிக் கொடுக்கக் கூடாது என்றும் சொல்லி இந்த அதிகாரத்தை முடிக்கிறார்.
இந்தியாவில் பல உளவுத்துறைகள் உள்ளன. அவற்றில் சில:
1. RAW – Research and Analysis Wing – இது வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கும், வெளிநாட்டு தீவிர வாதம் முதலானவை ...
2. IB – Intelligence Bureau – இது உள்நாட்டிற்கு
3. Joint Intelligence committee – ஒட்டு மொத்த உளவு கண்காணிப்பு பிரிவு
4. Military intelligence – இராணுவ உளவுப் பிரிவு
மேற்கண்ட நான்கும், இந்தியப் பிரதமரின் நேரடி கண்காணிப்பிலும், உள்துறை அமைச்சகத்தாலும் இயங்குபவை.
ஒவ்வொரு அமைப்பின் கீழும் பல் வேறு அமைப்புகள் இயங்குகின்றன.
DRDO (Defense Research and Development Organisation) என்னும் அமைப்பின் கீழ் DRDO Netra என்று ஒரு பிரிவு இருக்கிறது. அதன் வேலை, இணையத்தை கண்காணிப்பது.
வேலையில்லாம, நீங்க சும்மா வெடிகுண்டு செய்வது எப்படி? என்றெல்லாம் தேட ஆரம்பித்தால் அடுத்த சில நொடிகளிலேயே அதற்கு தெரியவந்துடும். அப்புறம், நீங்க அவர்களின் கண்காணிப்பில்தான்! இது Skype, Google Talk இப்படி பேச்சுவழித் தகவல்களைக் கூடச் சேகரிக்கும்.
Mass Surveillance – வெகு மக்கள் கண்காணிப்பிற்கு பல அமைப்புகள் இருக்கு ஒவ்வொரு நாட்டிலும்! ஆண்டுதோறும் பல கோடிகளில் நிகழும்.
ஆகையால், ஒற்று என்பது சாதாரணமான விஷயம் இல்லை.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments