07/04/2022 (405)
வெகுளாமை என்றால் நாம் கோபப்பட அனைத்துக் காரணங்களும் இருந்தாலும்கூட அக் கோபத்தைத் தவிர்ப்பது. கோபம் என்பது மதி மயங்கிய நிலையில் நிகழ்வது. அதனால், வெகுளாமையை, வாய்மையை(30ஆவது) அடுத்து அமைத்துள்ளார் நம் பேராசான்.
ஒரு நிகழ்ச்சி. ஒன்றல்ல இரு நிகழ்வுகளைப் பற்றி பார்க்கலாம்.
ஒரு வீட்டு வாசலுக்கு முன்னாடி ஒருவர் தன் மிதிவண்டியை நிறுத்தி வைத்துக் கொண்டு அலைபேசியில் பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த வீட்டில் இருப்பவர் தன் மகிழ்வுந்தை (car) எடுத்துக் கொண்டு வெளியே செல்ல வேண்டும். வழியை அடைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கும் அந்த மிதிவண்டியில் இருந்தவர் அதைக் கவனிக்கலை. அவருக்கோ கோபம் வந்து விடுகிறது. வெளியே வந்து அவரை கண்டபடி திட்டி விரட்டி விடுகிறார்.
அவரோ ‘சாரி சார்’ என்கிறார். சாரியாவது பூரியாவது முதல்ல இடத்தைக் காலி பண்ணு. அறிவிருக்கா உனக்கு, இப்படி வாசலை அடைத்துக் கொண்டு நிற்கறே. நீயெல்லாம் படிச்சவனா? அப்படி, இப்படின்னு பேச, அவர் அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.
கொஞ்ச நாட்களுக்குப் பிறகு. ஒரு மகிழ்வுந்து (car) ஒன்று அவர் வீட்டு வாசலை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. நம்ம ‘கோபாச்சாரி’க்கோ மிக அவசரமாக வெளியே போகனும். வெளியே நிற்கற காரைப் பார்த்த உடன் வந்ததே கோபம்.
உண்டு இல்லைன்னு பார்க்கறேன்னு வேகமா வெளியே போகிறார். அந்த காரில் இருப்பவரோ நம்ம கோபாச்சாரிக்கோ தெரிந்தவர்தான். அன்றைக்கு மிதிவண்டியில் வந்தவரேதான் இப்பவும். நம்ம கோபாச்சாரிக்கு எப்படி இருக்கும்? பின்னியெடுத்திருப்பார்ன்னு தானே நினைக்கறீங்க. அதான் இல்லை.
நம்ம கோபாச்சாரி, அமைதிசாமியாராகி அடக்கமா உள்ளே போய் விடுகிறார். அந்தக் கார் ஒரு கால் மணி நேரம் கழித்துதான் கிளம்புது. நம்ம கோபாச்சாரி இப்போ, அவருக்கு இருக்கும் அவசரத்திலும், கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு அமைதிசாமியாகி உள்ளேயே இருக்கிறார் அந்த கார் செல்லும் வரை.
ஏன் இந்த திடீர் மாற்றம்? ன்னு நினைக்கறீங்க. அந்த வண்டியில் திருக்குறள் எதாவது எழுதியிருந்துதா? இல்லை.
அதை விட சுருக்கமாக மூன்றே எழுத்தில் “காவல்” என்று எழுதியிருந்தது. அது காவல் ஆணையரின் வண்டி!
“செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல் இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.” --- குறள் 301; அதிகாரம் - வெகுளாமை
சினம் செல்இடத்துக் காப்பான் = நம்ம கோபம் எங்கே செல்லுமோ அங்கே கோபம் கொள்ளாம இருப்பவன்தான் மனுசன்; அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் = கோபம் செல்லாத இடத்துலே எனக்கு கோபமே வராதுன்னு சொல்வதாலே என்ன பயன்.
சினம் காக்க வேண்டும் என்றால் அது செல்லும் இடத்திலும் காப்பதுதான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments