08/04/2022 (406)
பெரிய ஆளுங்கிட்ட நம்ம கோபத்தைக் காட்டினா, உடனே அவங்க நமக்குத் திருப்பிக் கொடுத்துடுவாங்க. அதன் பலன் கை மேல கிடைக்கும். இல்லை, இல்லை கன்னத்து மேல கிடைக்கும்! கணக்கு சரியா போயிடும்.
இதே, நம்மைவிட எளியார் மேல நாம கோபத்தைக் காட்டி அவர்களுக்கு ஒரு தீங்கு பண்ணினால் உடனே அவர்களாலே நம்மைத் திருப்பித் தாக்க முடியாது. ஆனால், ஒரு தீய விதையை விதைச்சுட்டோம்ன்னு பொருள். அது எப்போ வளர்ந்து நம்மைத் தாக்கும்ன்னு தெரியாது.
எந்த வினைக்கும், எதிர் வினை உண்டுன்னு விஞ்ஞானம் உறுதிபடச் சொல்லுது. மெய்ஞானம் அதை எப்பவோ சொல்லிட்டுது. தலைமுறையைத் தாக்கும்ன்னு சொல்றாங்க.
அது எப்படி நாம ஒன்னு பண்ணா அது எப்படி பின்னாடி வந்து தாக்கும். ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
என் வீட்டிலே ஒருத்தர் வேலை செய்கிறார். அவரைப் பிடித்து நான் தாளிக்கிறேன். அதாங்க கோபம் வந்து கடுமையா பேசிடறேன். அவராலே அப்போதைக்கு எதுவும் பண்ணமுடியாது. கம்முன்னு இருப்பார். வேற என்ன பண்ண முடியும்? அவர் வேலை முடிந்து வீட்டுக்குப் போகிறார்.
என் மகன் பள்ளி விட்டு வீட்டுக்கு வரனும். ஆனால் என்னன்னு தெரியலை. தாமதமாகுது. நான் வெளியேபோய் பார்க்கிறேன். அப்போதான் அவன் வரான். ஆனால் என்ன, காலைத் தாங்கி, தாங்கி நடந்து வரான். எங்கேயோ விழுந்திருக்கான். என்னடா தம்பி என்ன ஆச்சுன்னு கேட்கறேன்.
ஒன்னுமில்லைப்பா. ஒரு சைக்கிள் என் மேல இடிச்சு கிழே விழுந்துட்டேன்ன்னு சொல்றான். கொஞ்சம் அடிபட்டிருக்கு அவ்வளவுதான்.
சரி வா, மருத்துவரைப் பார்க்கலாம்ன்னு பார்க்கிறோம். சரியாயிடுச்சு. நல்லா இருக்கான் இப்போ.
ஆனால், அவன் ஒரு செய்தி சொன்னான். அப்பா, நான் விழுந்து கிடந்தபோது நம்மகிட்ட வேலை செய்கிற அந்த அண்ணன் அந்த வழியாத்தான் போனார். அவர் என்னை சரியா கவனிக்கலைப் போல. அதான் அவர் கம்முன்னு போய்யிட்டார்ப்பா என்றான்.
எனக்கு அப்போதான் ஒரு பொறி தட்டுச்சு. அப்பவும் அவர் கம்முன்னுதான் இருந்தார், இப்பவும் அவர் கம்முன்னுதான் இருந்திருக்கார்.
“செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்
இல்லதனின் தீய பிற.” --- குறள் 302; அதிகாரம் - வெகுளாமை
சினம் செல்லா இடத்துத் தீது = கோபம் வலியவர்களிடம் காட்டினால் நமக்கு உடனே தீமை விளையும் (இம்மைப் பயன்); செல் இடத்தும் அதனின் தீய பிற இல் = செல்லு படியாகிற இடத்தில் சினத்தைக் காட்டினால் அது அதைவிட தீமை பயக்கும். (இம்மைப் பயன், மறுமைப் பயன்)
அதனாலே, சினம் என்பது எப்பவும் நன்மை பயக்காது என்கிறார் நம் பேராசான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments