18/05/2023 (805)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வினை செயல்வகை 68 ஆவது அதிகாரமாக அமைந்துள்ளது.
வினை செயல்வகைக்கும், மாற்றானின் வலிமையைக் கண்டறிவதற்கும், அவனுடன் பேசி காரியம் சாதிப்பதற்கும் தூது முக்கியம் என்பதால் அடுத்த அதிகாரமாகத் தூதினை வைத்துள்ளார்.
தூது (69 ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து, மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (70), குறிப்பு அறிதல் (71), அவை அறிதல் (72), அவை அஞ்சாமை (73), நாடு (74) …
இப்படியாக அதிகார அமைப்பு முறை வளர்கிறது.
இதில், தூது, மன்னரைச் சேர்ந்தொழுகல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில் உள்ள பாடல்களை, நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம்.
அவை அறிதல் அதிகாரத்திலும் இரு குறள்களைப் பார்த்துள்ளோம்.
தலைவர்களைச் சேர்ந்து ஒழுகும்போது அவர்களின் குறிப்பறிந்து சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டும். இருப்பினும், அவர்கள் அமர்ந்திருக்கும் அவையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதால் இந்த அதிகாரங்களைத் தொடர்ந்து அவை அறிதல் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அவை அறிதலுக்குள் நுழைவோம்.
அவைக்குள் நுழைய வேண்டுமென்றால் சில விதிகள் இருக்காம்! அதெல்லாம் என்னவென்று பார்த்துவிட்டு நுழைவோம்.
முதலில், ‘சொல்லின் தொகை’ என்று ஒன்று இருக்காம். தொகுப்பாக இருப்பது தொகை! அவ்வளவுதான்.
அதுமட்டுமல்ல, தொகை என்றால் மறைந்துவருவதையும் குறிக்கும்.
வினைத்தொகையில் காலம் மறைந்துவரும். எடுத்துக் காட்டு: செய் புண்ணியம் என்பது வினைத்தொகை. அது, செய்த புண்ணியம்,செய்கின்ற புண்ணியம், செய்யப் போகும் புண்ணியம் என்ற மூன்றையும் உணர்த்தும்.
காலம் கடந்த பெயரெச்சம் வினைத்தொகை என்று நாம் முன்பு ஒரு முறை, கர்ணனைக் குறித்து சிந்திக்கும்போது பார்த்துள்ளோம். காண்க 18/07/2022 (507).
தொகை என்றால் தொகுப்பாகவும் இருக்கணும்; மறைந்தும் இருக்கணும் போல!
உங்களிடம் எவ்வளவு ‘தொகை’ இருக்கிறது? தொகை என்றால் இங்கே பணமாகப் பொருள்படுகிறது. தொகுப்பாகவும் மறைவாகவும் இருப்பதால் கேட்க வேண்டியுள்ளது!
சரி, சொல்லின் தொகை மூன்று வகைப்படும். அவையாவன: செஞ்சொல், இலக்கணச் சொல், குறிப்புச் சொல் என்பன.
செஞ்சொல் என்றால் நேரடியாகப் பொருளைத் தரும். செம்மை +சொல் = செஞ்சொல். சிறந்த சொல் என்றும் பொருள். ஆழ்ந்து தேடினால் உண்மைப் பொருளையும் தரும்!
இலக்கணச் சொல் என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருளுக்குத் தந்து உரைப்பது. இதுவும் மூன்று வகைப்படுமாம். அவையாவன: விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டும் விடாத இலக்கணை.
(விரிக்க, விரிக்க வியப்பே மேலிடுகிறது. இன்றைக்கும் நாளைக்கும் குறள் இல்லையென்றேபடுகிறது.)
என் ஆசிரியர்: சொல்லின் தொகையை மறக்காதீங்க! முத்தொள்ளாயிரத்திலிருந்து ஒரு பாடலை, நாளைப் பார்க்கலாம் என்று நடையைக் கட்டிவிட்டார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments