top of page
Search

செல்லாமை உண்டேல் ... 1151

14/02/2024 (1075)

அன்பிற்கினியவர்களுக்கு:

பொருட்பாலில் சில அதிகாரங்களைப் பார்க்க வேண்டியுள்ளன… என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டேயிருக்கும்போது நம்மாளு ஒரு திரையிசைப் பாடலை முனுமுனுத்துக் கொண்டே நுழைகிறார்.

 

நம்மாளு:

… இல்லறம் கேட்டால் துறவறம் பேசும் இதயமே மாறிவிடு …

இது மாலை நேரத்து மயக்கம்,

பூ--மாலை போல் உடல் மணக்கும்!

இதழ் மேலே--இதழ் மோதும்-- அந்த

இன்பம் தேடுது எனக்கும்!

 

ஆசிரியர்: … இது காலதேவனின் கலக்கம்!

இதை காதல் என்பது பழக்கம்! …

 

ஓஒ.. ஓர் அருமையான பாடல். கவியரசு கண்ணதாசன் இல்லறத்தையும், வெறுத்துப் போய் துறவை விரும்பும் ஒருவனையும் இணைக்கும் விதமாக அமைந்த பாடல். 1970 இல் வெளிவந்த “தரிசனம்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. இது நிற்க.

 

என்ன, காமத்துப்பாலை முடித்துவிட்டு பொருட்பாலைப் பார்க்கலாம் என்கிறீர்களா?

 

நம்மாளு: ஆமாம், ஐயா…

 

ஆசிரியர், அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.

 

எந்த ஓர் உயிரிணத்திற்கும் தலையாய குறிக்கோள் Procreation. அஃதாவது, வழி வழியாகத் தலைமுறையைத் தொடர்வது ஒரு முக்கியமான இலட்சியம் என்று பார்த்தோம். காண்க 06/03/2021.

 

இல்லறத்தின் முதல் அலகு வாழ்க்கைத் துணை. தமிழ் நெறியில் காதல், கல்யாணம் என்று இரு படி நிலைகள். அஃதாவது, களவு, கற்பு.

 

நம் வாழ்க்கையில் பல துணைகள் வரும், வந்து கொண்டே இருக்கும். இருந்தாலும், நம் பேராசான் அழுத்திச் சொல்வது இல்லறத்தை இணைந்து நடத்தும் இணையரைத்தான் வாழ்க்கைத் துணை என்று சிறப்பித்துக் கூறுகிறார்.

 

நம் பேராசான் களவியலை ஏழு அதிகாரங்களில் விரித்துரைத்தார். நாம் அவற்றை முன்பே சிந்தித்துள்ளோம்.

 

கற்பியலுக்குப் பதிணெட்டு அதிகாரங்களை வைத்துள்ளார். முதல் அதிகாரம் பிரிவு ஆற்றாமை (116 ஆவது அதிகாரம்). இதன் முதல் குறளை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 20/05/2023. மீள்பார்வைக்காக:

 

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை. - 1151; - பிரிவு ஆற்றாமை       

 

இது நிற்க.

 

திடீர்ன்னு ஒரு நாள் வேலையெல்லாம் கொஞ்சம் பரபரப்பாக இருக்கும். இந்தாங்க இந்த காப்பியைக் குடிங்க ஆறிடப் போகுதும்பாங்க. அப்புறம் உங்களுக்குப் பிடித்த உணவு தயாராயிட்டு இருக்கும். உங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருக்கும். சரி, அனுபவிப்போம்ன்னு அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அந்தச் செய்தியைச் சொல்வாங்க.

 

ஏங்க, இந்தப் பொருள் இங்கே இருக்கு. அது அங்கே இருக்கு. நான் ஒரு இரண்டு நாளைக்கு இருக்க மாட்டேன். என் நண்பி கூப்பிட்டா அவளோட வீட்டிலே ஒரு விசேஷமாம். போயிட்டு சீக்கிரமாக வந்துடுவேன். அதுவரைக்கும் வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கோங்க. வரட்டுமான்னு கிளம்பிப் போயிடுவாங்க.

 

தற்காலிகப் பிரிவுதான் என்றாலும் நெஞ்சம் படபடங்குது. இது இரண்டு பக்கமும் நடப்பதுதான்.

 

அது போல நிகழ்ந்த ஒரு நிகழ்வைதான் நம் பேராசான் அவர்களைக் கொண்டு பேச வைக்கிறார்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page