13/06/2024 (1195)
அன்பிற்கினியவர்களுக்கு:
கரும்பினை இரு உருளைகளின் இடையில் இட்டு அதனைக் கசக்கி, நசக்கிப் பிழிந்து வரும் சக்கையில் ஒரு சொட்டுச் சாறும் இல்லாத அளவிற்குச் சாறு எடுப்பார்கள்.
அதான் எனக்குத் தெரியுமே என்பீர்கள். பொறுப்பீர்.
முந்தைய குறளில் கன்னத்தை அடித்துப் பெயர்ப்பதுபோல அவர்களைப் பயமுறுத்தினால் பயன் இருக்கலாம் என்றவர் அடுத்து யோசித்திருப்பார் போலும். அதற்கும் சரிப்பட்டு வரவில்லை என்றால்?
அடுத்த வழிமுறைதான் கரும்புச் சாறு எடுக்கும் முறை!
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். – 1078; - கயமை
சான்றோர் சொல்லப் பயன்படுவர் = உயர்ந்தவர்களை அணுகி அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும், அவர்கள் உடனே செயல்படத் தொடங்கி மாற்றங்களை நிகழ்த்துவார்கள்; கீழ் கரும்பு போல் கொல்லப் பயன்படும் = ஆனால், கயவர்களை, கரும்பினைப் போல் அழுத்திப் பிழிந்தால்தான் அவர்களிடம் இருந்து கொஞ்சமாவது பயன் இந்தச் சமூகத்திற்குக் கிடைக்கும்.
உயர்ந்தவர்களை அணுகி அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலே போதும், அவர்கள் உடனே செயல்படத் தொடங்கி மாற்றங்களை நிகழ்த்துவார்கள். ஆனால், கயவர்களைக் கரும்பினைப் போல் அழுத்திப் பிழிந்தால்தான் அவர்களிடம் இருந்து கொஞ்சமாவது பயன் இந்தச் சமூகத்திற்குக் கிடைக்கும்.
இஃது தலைமைக்குச் சொன்னது.
கயவர்களின் பண்புகளில் இன்னும் ஒன்று: பிறர் நன்றாக வாழத் தாம் பொறுக்கமாட்டார்கள்! ஒருவர் நன்றாக ஆடை உடுத்தினாலோ, நல்ல உணவுகளை உண்டு களித்தாலோ, உடனே கிளம்பிவிடுவார்கள்! எதற்கு?
அவனுக்கு எப்படியப்பா அவ்வளவு வருமானம் வருகிறது? என்னமோ பன்றான். உனக்கு எப்படின்னுத் தெரியுமா? என்று நம்மையும் அவர்களின் பொறாமையின் எல்லைக்குள் இழுத்துக் கொள்வார்கள்!
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். – 1079; - கயமை
வற்று = கூடியது;
கீழ் பிறர் உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் = கயமை என்பது பிறர் நன்றாக ஆடை அணிகலன்களை அணிவதைக் கண்டாலோ, நல்ல உணவுகளை உண்பதைப் பார்த்தாலோ; பிறர் மேல் = அவர்களிடம்; வடுக் காண வற்றாகும் = ஏதேனும் குறையை வலிந்து காணக் கூடியதாகும்.
கயமை என்பது பிறர் நன்றாக ஆடை அணிகலன்களை அணிவதைக் கண்டாலோ, நல்ல உணவுகளை உண்பதைப் பார்த்தாலோ, அவர்களிடம், ஏதேனும் குறையை வலிந்து காணக் கூடியதாகும்.
கயமையின் உச்சகட்டம் எது? என்ற வினாவிற்கு விடை அளித்து கயமையை நிறைவு செய்கிறார் நம் பேராசான்.
அஃதாவது, அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் முதலில் பிறரை விற்பார்கள். அதுவும் சரிப்பட்டு வரவில்லை என்றால் அவர்களையேகூட விற்றுவிடுவார்கள் என்கிறார்.
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து. – 1080; - கயமை
கயவர் எற்றிற்கு உரியர் = கயவர்கள் எந்த அளவிற்குக் கிழ்த்தரமாகச் செல்லக் கூடியவர்கள் என்றால்; ஒன்று உற்றக்கால் = அவர்களுக்கு ஒரு துன்பம் என்று வந்துவிட்டால்; விற்றற்கு உரியர் விரைந்து = அவர்களையேகூட விரைந்து விற்றுவிடுவார்கள்.
கயவர்கள் எந்த அளவிற்குக் கிழ்த்தரமாகச் செல்லக் கூடியவர்கள் என்றால், அவர்களுக்கு ஒரு துன்பம் என்று வந்துவிட்டால் அவர்களையேகூட விரைந்து விற்றுவிடுவார்கள்.
கயமை அதிகாரம் முற்றிற்று; ஒழிபியல் முற்றிற்று; பொருட்பால் முற்றிற்று.
இன்னும், காமத்துப் பாலில் இறுதி மூன்று அதிகாரங்களில் உள்ள குறள்களைக் காண வேண்டும். அதனுடன் திருக்குறள் பேசுவோம் வாங்க நிறைவு பெறும்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Kommentarer