12/09/2023 (920)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வானத்தவர் என்றால் காற்றில் கரைந்தவர்கள், புகழுடம்பு எய்தியவர்கள், தேவர்கள் என்றெல்லாம் பொருள்படும்.
ஒருவன் வந்துள்ள விருந்தினர்களை உபசரித்துவிட்டு மேலும் யாரேனும் வருகிறார்களா என்று காத்திருப்பானாம் ஆவலோடு!
அப்படி ஒருவர் இருப்பின் யார்தாம் அவர் இல்லம் சென்று பசியாறிக் கொள்ள விரும்பமாட்டார்கள்? தேவையிருப்பின் அனைவருமே விரும்புவர்!
அவரை உயர்த்த வேண்டும், சிறப்பித்துக்கூற வேண்டும் என்று நினைத்த நம் பேராசான் ஒரு படி மேலே செல்கிறார். ஒரு படி என்ன? அதற்கும் மேலே சென்று காற்றில் கரைந்து போனார்களே அவர்கள்கூட நாமும் அவரிடம் சென்று உண்டு மகிழாமல் போனோமே என நினைப்பார்களாம்! ஆனால் அவர்களால் அது இயலாது. என்ன ஒரு அழகிய கற்பனை!
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.” --- குறள் 86; அதிகாரம் – விருந்தோம்பல்
நல்விருந்து = கிடைத்தற்கரிய விருந்து; அஃதாவது, அந்த விருந்து இனிமேல் அவர்களுக்கு இல்லை என்ற பொருளில்.
செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் (கண்) = மனம் மகிழ உண்ட விருந்தினர் செல்வதைப் பார்த்து தானும் மகிழ்ச்சி கொண்டு மேலும் விருந்தினர்கள் வருவதற்கு வாய்புகள் இருக்கின்றனவா என்று பார்த்திருப்பானிடம்; வானத்தவர்க்கு நல்விருந்து = காற்றில் கரைந்து போனார்களே அவர்கள்கூட கிடைத்தற்கரிய விருந்து இது என்று எண்ணக்கூடும்!
மனம் மகிழ உண்ட விருந்தினர் செல்வதைப் பார்த்து தானும் மகிழ்ச்சி கொண்டு மேலும் விருந்தினர்கள் வருவதற்கு வாய்புகள் இருக்கின்றனவா என்று பார்த்திருப்பானிடம் காற்றில் கரைந்து போனார்களே அவர்கள்கூட கிடைத்தற்கரிய விருந்து இது, நாமும் அந்தப் பூமிப் பந்தில் இருந்த போதே சென்று உண்டு மகிழாமல் போனோமே, என்று நினைக்கவும் கூடும்.
மேற்கண்ட உரை எனது எண்ணத்தில் எழுந்தது. ஆனால், பெரும்பாலான அறிஞர் பெருமக்களின் உரைகள் மறுமை பயன் கிடைக்கும் என்ற வகையில் உரை செய்துள்ளனர்.
மூதறிஞர் மு.வ. உரை: வந்த விருந்தினரைப் போற்றி அனுப்பிவிட்டு, இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.
கா. சுப்பிரமணிய பெருமானார் உரை: தன்னிடம் வந்துசெல்லும் விருந்தினர்க்குதவி புரிந்து அனுப்பிவிட்டுப் பின் வரக்கூடிய விருந்தினை எதிர்பார்த்திருப்பவன் விண்ணுலகத்தார் விரும்பி எதிர்கொள்ளத்தக்க விருந்தினன் ஆவன்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா: வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
விருந்தினர்களைப் பசியாற்றினால் வரும் நன்மைகள்:
இம்மையில் வித்தும் இடல் வேண்டும் கொல்லோ?;
மறுமையில் வானத்தவர் விழைந்து ஏற்கும் விருந்தினன். மகிழ்ச்சிதானே!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Commenti