04/08/2023 (883)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
குறள் 825 இல் கூடா நட்பின் பேச்சுகளை நம்பி செயலில் இறங்கக் கூடாது என்றார். காண்க 03/08/2023 (882).
குறள் 826 இல் முகத்தில் சிரிப்பிருக்கும். ஆனால் உள்ளே நெருப்பிருக்கும். அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் விஷமிருக்கும் என்றார்.
காண்க 03/08/2023 (883).
அடுத்தக் குறிப்பு என்னவென்றால், குனிந்து குழைந்து வளைந்து நெளிந்து இப்படியெல்லாம் பேசுவார்களாம்! அவர்கள் இப்படி பணிந்து வளைந்து நம்மைக் கும்பிடுகிறார்களே என்று நாம் மனம் மகிழக் கூடாதாம்.
அவர்கள் வளைந்து சொல்லும் வணக்கம் எப்படிப்பட்டது என்பதற்கு அருமையான ஒரு உவமையைச் சொல்கிறார்.
அதாவது, வில்லானது (Bow) எதிரியைத் தாக்கும் முன்னர் நன்றாக பின் நோக்கி வளைந்து வணக்கம் போடுவதுபோல் ஒரு கணம் இருக்குமாம். அடுத்த நொடி அதிலிருந்து புறப்படும் அம்பானது (arrow) பறந்துவந்து தாக்குமாம்.
நம்மாளு: ரொம்ப சரி ஐயா. கூழைக் கும்பிடு போடுபவர்களை நம்பக் கூடாது என்கிறார்கள். அவர்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்கணும்.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
“சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.” --- குறள் 827; அதிகாரம் – கூடா நட்பு
வில் வணக்கம் தீங்கு குறித்தமையான் = வில்லினது வணக்கம் தீங்கினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது போல; ஒன்னார்கண் சொல்வணக்கம் = கூடா நட்பின் சொல்லில் இருக்கும் பணிவும் அவ்வாறே; கொள்ளற்க = ஆதலினால் தவிர்க்க.
வில்லினது வணக்கம் தீங்கினை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. அது போல கூடா நட்பின் சொல்லில் இருக்கும் பணிவும் அவ்வாறே. ஆதலினால், அம் மயக்கும் சொற்களில் மயங்காதீர்.
ஆளை மயக்கும் பேச்சுகள்தாம் கூடா நட்பின் கருவிகளில் ஒன்று என்பதை நாம் கண்ட மூன்று குறள்களின் (825, 826, 827) மூலம் எடுத்துரைத்தார்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments