06/03/2021 (48)
அன்பிற்கினியவர்களுக்கு:
செல்வங்கள் பல. அது வெவ்வேறு வடிவத்திலும், உணர்வு நிலையிலும் எல்லா வகையினரிடமும், அஃதாவது நல்லவர், அல்லவர் என்ற பாகுபாடு இல்லாமல், இருக்கும். எல்லா வகை செல்வங்களுக்கும் சிறப்புகளும், பயன்களும் இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சில செல்வங்கள் அதனின் உயர்ந்த பயன் கருதி ‘செல்வத்துள் செல்வம்’ ஆகும் என்று வள்ளுவப்பெருந்தகை சுட்டுகிறார்.
‘செல்வத்துள் செல்வம்’ நிறைந்த குறள்கள் இதோ:
“அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள.” – குறள் 241; - அருளுடைமை
(பூரியார் கண்ணும் = இழிந்தாரிடத்திலும்)
“செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை.” – குறள் 411 கேள்வி
‘அருட்செல்வம்’ எல்லா உயிர்களிடத்தும் செலுத்தப்படுவதனால் அச்செல்வம் செல்வத்துள் செல்வமாகிறது அளிப்பவர்கட்கு!
சான்றோர்களின் சொற்களைக் கேட்கும் வாய்ப்பு, அதனை உள்வாங்கும் திறன், வாங்கியபடி ஒழுகும் நிலை, அதானால் எய்தும் மேன்மை அளவிடமுடியாதது. அதனால் இதை ‘கேள்விச்செல்வம்’ என்கிறார் ஏற்பவர்கட்கு!
நாம் கேட்கும் சொற்கள் நம்மை புரட்டிப்போடும். கேட்பதிலும் மனதில் நிறுத்துவதிலும் கவனம் தேவை. சில சொற்கள் உயர்த்தும், சில தாழ்த்தவும் முயலும். நல்லவை கேட்போம்.
“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.” ---குறள் 416; - கேள்வி
எனைத்தானும் = எவ்வளவு ஆயினும்; அனைத்தானும் = அதனின் திறத்தளவு
அருட்செல்வம், கேள்விச்செல்வம் முறையே அளிப்பவர்கள், ஏற்பவர்கள் என்று இருபாலருக்கு தனித்தனியாக அமையும் செல்வங்கள்.
இருவர் கூடி பெறும் ‘பொருள்னா அதான் பொருள்பா’ ங்கிறா மாதிரி ஒரு சிறப்பான செல்வம் (பொருள்) இருக்கா? வள்ளுவப்பெருமான் சொல்லியிருக்காராம். தேட சொல்லிட்டு கிளம்பிட்டாரு ஆசிரியர்! தேடலாமா?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios