top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் ... 671

07/05/2023 (794)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

திருக்குறளில் வினையைக் குறித்த அதிகாரங்கள் மொத்தம் ஆறு. அவையாவன: 1) தீவினையச்சம் - 21ஆவது அதிகாரம், 2) தெரிந்து வினையாடல் - 52 ஆவது அதிகாரம்; 3) ஆள்வினையடைமை – 62 ஆவது அதிகாரம்; 4) வினைத்தூய்மை – 66 ஆவது அதிகாரம்; 5) வினைத்திட்பம் – 67 ஆவது அதிகாரம்; மற்றும் 6) வினைச்செயல்வகை – 68 ஆவது அதிகாரம்.


தீவினையச்சம் இல்லறத்தில் இருப்பானுக்குச் சொல்லப்பட்டது. தெரிந்து வினையாடலும், ஆள்வினையுடைமையும் தலைமைக்குச் சொல்லப்பட்டவை. மற்ற மூன்று அதிகாரங்களும் அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டவை.


அதாவது, ‘செயல்’ என்பதன் முக்கியத்துவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதைக் காட்டுகிறார். இதனை பின்னர் விரிப்போம்.


வினைத்திட்பம் என்னும் அதிகாரத்தில் மனத்திட்பத்தைச் சொல்லி முடித்தார். அத்தகைய மனத்திட்பம் உடையவர்கள், வெளிப்பட்டுச் செயல்களை எங்கனம் செய்வது என்பதை வினை செயல்வகையில் சொல்கிறார்.


நாம் இப்போது வினைசெயல்வகைக்குள் நுழைவோம்.


முதல் குறளிலேயே, மனத்தில் எண்ணி முடித்து ஒரு தெளிவு பெற்றால், அதன் பிறகு செயல்தான்! என்று சொல்கிறார். மேலும், தெளிவு பெற்றபின்னும் காலம் தாழ்த்துவது தீது என்கிறார்.


சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு

தாழ்ச்சியுள் தங்குதல் தீது.” --- குறள் 671; அதிகாரம் – வினை செயல்வகை


சூழ்ச்சி = ஆராய்தல், எண்ணித் தெளிதல்; சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் = எண்ணித்தெளிதலின் முடிவில் “இந்தச் செயலை முடித்துவிடலாம்” என்றத் துணிவைப் பெறுதல்; அத் துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது = அந்தத் துணிவைக் கிடப்பில் போடுதல், தள்ளி வைத்தல் தீங்கினையேத் தரும்.


எண்ணித்தெளிதலின் முடிவில் “இந்தச் செயலை முடித்துவிடலாம்” என்றத் துணிவைப் பெறுதல். அந்தத் துணிவினைப் பெற்றபின், அதைக் கிடப்பில் போடுதல், தள்ளி வைத்தல் என்பது தீங்கினையேத் தரும்.


முடிவெடுத்துவிட்டால் முடித்துவிட்டுதான் உட்காரவேண்டும் என்கிறார் நம் பேராசான்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page