26/07/2023 (874)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெறுவதெல்லாம் விழுப்புண் பெற்ற நாள்களாகத்தான் இருக்கும். விழுப்புண் பெறாத நாள்கள் வரலாற்றில் ஒதுக்கப்படும் என்றான் அந்த வீரன்! (குறள் 776)
அதற்கு எதிர் நின்ற மறவனின் பதில் என்ன?
வீரனே நன்கு சொன்னாய்! எங்கள் விரர்கள் தங்கள் காலினை அழகு செய்ய கழல் அணிகிறார்கள். அதுவும் ஒரு காலில்தான் அணிவார்கள். அந்தக் கழல் எதனால் செய்யப் பட்டது தெரியுமா?
எம்மக்களைத் துன்புறுத்தியப் பகைவர்களை அழித்து அவர்கள் அணிந்திருந்தார்களே அந்த மகுடங்களில் இருந்தும், கீரீடங்களில் இருந்தும் எடுத்தப் பொன்னால் செய்யப் பட்டவை. இந்த வீரன் இந்தப் போரில் வென்றான்; இந்தப் பகைவனை வெற்றி கொண்டான் என்று உலகிற்கு உரைக்க அணிந்து கொள்வார்கள். அந்தப் புகழ் இந்த பரந்துபட்ட உலகில் சுழன்று பரவ வேண்டும் என்று நினைப்பார்களேத் தவிர தங்கள் உயிரை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்!
“சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.” --- குறள் 777; அதிகாரம் – படைச் செருக்கு
இசை = புகழ்; நீர்த்து = தன்மைத்து; காரிகை = மங்கையர், அழகு;
சுழலும் இசைவேண்டி = மக்களைக் காப்பாற்றியவர்கள் இவர்கள் என்ற புகழ் இந்த உலகில் சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பதை விரும்பி; வேண்டா உயிரார் = அவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று;
கழல் யாப்பு = அஞ்சாமல் கால்களில் வெற்றிக் கழல்களைக் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்படுவார்கள்; காரிகை நீர்த்து = அது எத்தன்மைத்து என்றால் மங்கையர்கள் அழகாக தங்கள் கால்களில் சதங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடப் புறப்படுவதைப் போல.
“மக்களைக் காப்பாற்றியவர்கள்” இவர்கள் என்ற புகழ் இந்த உலகில் சுழன்று கொண்டிருக்க வேண்டும் என்பதை விரும்பி, அவர்களின் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்று அஞ்சாமல் கால்களில் வெற்றிக் கழல்களைக் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்படுவார்கள். அது எத்தன்மைத்து என்றால் மங்கையர்கள் அழகாகத் தங்கள் கால்களில் சதங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடப் புறப்படுவதைப் போல.
இந்தக் குறளுக்கு அறிஞர் பெருமக்கள் பொருள் சற்று வித்தியாசமாக உள்ளது.
மூதறிஞர் மு.வரதராசனார்: பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.
புலவர் நன்னன்: தனக்குப் பின்னும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்க வல்ல புகழுக்காக உயிரையும் வேண்டாத வீரன் கட்டியுள்ள கழல் அழகியதாகும்.
புலவர் வெற்றியழகனார்: சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் – புகழுக்காக உயிரைத் தருவதற்கும் காப்புக் கட்டிக் கொள்ளும் வீரர்க்கு அதுவே அழகினைச் சேர்க்கும்.
அதாவது, காரிகை என்பதற்கு அழகு என்று பொருள் கொண்டு கட்டியிருக்கும் கழலே அழகு என்றார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments