10/08/2021 (168)
அன்பிற்கினியவர்களுக்கு:
கடல் முழுவதும் நக்கியே குடித்து விடலாம் என்று ஒரு பூனை ஆசைப்பட்டால் அது எப்படியிருக்குமோ அது போல நான் ராமாயணம் இயற்ற முற்படுகிறேன் என்று கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமானே கூறியுள்ளார்.
ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசுஇல் கொற்றத்து இராமன் கதை அரோ!
பூசை என்றால் பூனை என்றும் பொருள் உள்ளதாம்! கவிப்புலியே பூனை போலத் தயங்கினார் என்றால் நான் எம்மாத்திரம்.
எனக்கு இன்று பெரும் தயக்கம். திருக்குறளை எடுத்துச் சொல்வது என்பது எனக்கு ஒரு சிறு எறும்பு மூச்சு விட்டே தன் முன்னால் உள்ள பெருமலையைத் தள்ள முற்படுவது போல. அப்படி இருக்கையிலே, இன்றைக்குச் சொல்ல விரும்பும் குறள் பெருமலையிலே உள்ள பெரும் உச்சம். அதான் எனக்கு அச்சம்.
அனைத்துத் தத்துவங்களையும் சாறாகப் பிழிந்து, அதனை ஏழு சீர்களிலே அடைத்துத் தந்து விட்டுச் சுலபமாகக் கடந்து சென்றுவிட்டார் நம் வள்ளுவர் பெருந்தகை.
முதலிலே, அந்தக் குறளைப் பார்த்து விடலாம்:
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. - 27; - நீத்தார் பெருமை
மணக்குடவர் பெருமான் உரை: சுவை முதலாகக் கூறிய ஐந்து புலன்களின் வகையை ஆராய்வான் கண்னதே உலகம். எனவே, இவற்றின் காரியம் வேறொன்றாகத் தோன்றுமன்றே அதனை அவ்வாறு கூறுபடுத்திக் காணக் காரணந் தோற்றுமாதலால், காரியமான உலகம் அறிவான் கண்ணதாம் என்றவாறாயிற்று.
பரிமேலழகப் பெருமானின் நீண்ட உரையை எடுத்து இங்கே மீண்டும் எழுதவே பயமாக இருக்கிறது. அதனை இப்போதைக்குத் தள்ளி வைக்கிறேன்.
பேராசிரியர் மு.வ உரை: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
இது நிற்க.
ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது போல, நாம் அனுபவிக்கும் சுவைத்தல், பார்த்தல், தொடப்படுதல், கேட்டல், முகர்தல் ஆகிய அனுபவங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும். எதனால் அதனை உள்வாங்குகிறோம்? சருமம், நாக்கு, கண். மூக்கு, செவி என்ற ஐந்து புலன்களால் (இவை ஞானேந்திரியங்கள்). இவை போதுமா என்றால் போதா. அவற்றிற்கு வாய், கை, கால், மலவாய், கருவாய் என ஐந்து தேவைகள் இருக்கின்றன (இவை கர்மேந்திரியங்கள்). இவற்றிற்கு மேலும், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கருவிகள் (அந்தக் கரணங்கள்) தேவைப்படுகின்றன. தானாக அனுபவிக்க முடியுமா? அதற்குத் தேவை பஞ்ச பூதங்கள் என்று வழங்கப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பொருள்கள்.
இதுவரை 24 பொருள்கள் வந்துவிட்டன. இதை 24 நான்கு தத்துவங்கள் என்கிறார்கள். இது மேலும் வகைப்படுத்தப்பட்டு 96 ஆக விரிகிறது! இப்படி இந்த வகைகளின் கட்டினை அறிந்து அதனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களாம் முற்றும் துறந்தவர்கள் என்று வழங்கப்படும் நீத்தார்கள். அவர்களின் கையிலேதான் உலகமே இருக்காம்.
அப்பாடா ஒரு வழியா முடிச்சேன். பெரியோர்கள் மன்னிப்பார்களாக.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments