05/05/2021 (108)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நமக்குத்தெரியும் 108 வது குறள், “நன்றி மறப்பது நன்றன்று …” சும்மா ஒரு மீள்பார்வை அவ்வளவுதான். சரி, இன்றைய செய்திக்கு வந்துடுவோம்.
தமிழர்கள் சுவைகளை அறிந்து வைத்தியம் பார்த்தாங்க. அறுசுவை தமிழின் சிறப்பு. இதிலே பல ஆராய்ச்சிகள் பண்ணியிருக்காங்க. இதை மீட்டு எடுத்தா எங்கேயோ போயிடலாம்.
நமக்கு தெரிஞ்சதுதான் கீழே இருக்க அறுசுவைகள். ஜோடி, ஜோடியா இருப்பதற்கு காரணம் ஒன்றுக்கு மாற்று இன்னொன்று. சமையல் பண்ணுவதற்கும் இது கைகொடுக்கும். புளிப்பு அதிகமான உப்பை போட்டு சரி பண்ணிடலாம்!
இனிப்பு – காரம்
புளிப்பு – உவர்ப்பு (உப்பு)
துவர்ப்பு – கைப்பு (கசப்பு)
சரி, இப்போ எதுக்கு இதுன்னு கேட்கறீங்க. சும்மா தெரிஞ்சு வைப்போம்.
நாம குறளுக்கு வந்துடலாம். நாக்குக்கு மட்டும் சுவை இல்லை, காதுக்குகூட சுவை தெரியுமாம். காதுக்கு இனிமையான வார்த்தைகளைத்தான் பேசனும்னு நாம ஏற்கனவே பார்த்தோம்.
சில சமயம், காதுக்கு கசப்பானதும் சொல்ல வேண்டியிருக்குமாம். பெரியோர்கள் இடித்துச்சொல்லும் போது காதுக்கு கசக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும் அதனின் நன்மை கருதி பொறுத்து செயல்பட்டால் அந்த தலைவனின் கீழே மக்கள் விரும்பி இருப்பாங்களாம். இதோ அந்தக் குறள்:
“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கு முலகு.” --- குறள் 389; அதிகாரம் - இறைமாட்சி செவி = காது; கைப்பச் சொல் பொறுக்கும் = கசக்கும்படியான சொற்களால் இடித்துச் சொன்னாலும் அதைப் பொறுத்து; பண்புடைவேந்தன் = ஆட்சி செய்யும் நல்ல பண்புடைய தலைவனின்; கவிகைக்கீழ் = அந்த ஆட்சியின் கீழ்; கவிகை = குடை; உலகு = உலகம், மக்கள்; தங்கும் = தங்குவார்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments