28/04/2024 (1149)
அன்பிற்கினியவர்களுக்கு:
இந்த அதிகாரத்தில் அறிவு சார் கருத்துகளுக்கு “உணவு” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
குறள் 412 இல் செவிக்கு உணவு என்றும், குறள் 413 இல் செவி உணவின் கேள்வி உடையார் என்றும் பயன்படுத்துகிறார்.
அவி என்றால் அடப்படுவன. அடப்படுதல் என்றால் சமைக்கப்படுதல். அஃதாவது, “அவி” என்றால் “நன்றாகச் சமைத்த” என்று பொருள்.
பதினொன்றாந் திருமுறையில் உள்ள திருவிடைமருதூர் மும்மணிகோவையில் ஒரு பாடல்
வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா(து)
உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபல பகர்ந்தே … திருவிடை மருதூர் மும்மணிக்கோவை
“அவி அடுநர்க்குச் சுவை பல பகர்ந்தே” என்றால் சமையல் செய்பவர்க்கு இதை இதைச் செய் என்று சொல்வது.
சரி, இந்தக் கதையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? நம் பேராசான் அவி உணவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.
முதலில் அந்தக் குறளைப் பார்ப்போம்.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. – 413; - கேள்வி
இந்தக் குறளில் உணவு என்றால் சிறந்த கருத்துகள் (அறிவு) என்ற பொருளில்தான் கையாள்கிறார். எனவே, அவி உணவு என்றால் நன்றாகச் சீர்திருத்தப்பட்ட செம்மையான கருத்துகள் (அறிவு) என்ற பொருள் ஏற்புடையதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
“அவி உணவில் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து” என்கிறார். சிறந்த செம்மையான கருத்துகளை உணர்ந்து வெளிப்படுத்தக் கூடிய ஆன்றாரோடு அவர்கள் (செவி உணவில் கேள்வி உடையார்கள்) இணையாக வைக்கப்படுவர் இந்த உலகத்தில் என்கிறார் என்று நினைக்கிறேன்.
மேற்கண்ட அடிப்படையில் குறளின் பொருளை முழுமையாகப் பார்க்கலாம்.
ஆன்றார் = அறிஞர், சான்றோர்;
செவி உணவில் கேள்வி உடையார் =அறிஞர்களின் சொல்களைக் கேட்டலின் மூலமாகச் செவியில் உள்வாங்கி சிறந்த கருத்து ஞானம் உடையவர்கள்; அவி உணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து = சிறந்த செம்மையான கருத்துகளை உணர்ந்து வெளிப்படுத்தக் கூடிய சான்றோர்களுக்கு இணையாக வைக்கப்படுவர் இந்த உலகத்தில்!
அறிஞர்களின் சொல்களைக் கேட்டலின் மூலமாகச் செவியில் உள்வாங்கி சிறந்த கருத்து ஞானம் உடையவர்கள், சிறந்த செம்மையான கருத்துகளை உணர்ந்து வெளிப்படுத்தக் கூடிய சான்றோர்களுக்கு இணையாக வைக்கப்படுவர் இந்த உலகத்தில்!
அஃதாவது, கேள்வி ஞானம் சான்றோனாக்கும்!
ஆனால், பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் அவி உணவு என்பதற்கு அவிர் பாகம் என்று பொருள் காண்கிறார்கள்!
அஃதாவது, தேவர்கள், தெய்வங்களுக்கு வேள்வித் தீ மூட்டி அந்தத் தீயில் அவிர் பாகம் என்று உணவுகளைத் தீயில் இடுவார்கள். எனவே, அவி உணவு என்றால் அவிர் பாகம், அவிசு என்கிறார்கள்.
ஆன்றார் என்பதற்குத் தேவர்கள் என்று பொருள் காண்கிறார்கள்.
அறிஞர் பெருமக்களின் உரைகள் வருமாறு:
மூதறிஞர் மு. வரதராசனார்: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
புலவர் புலியூர்க் கேசிகன்: செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.
உங்களின் கருத்து என்ன? அதனை அறிய ஆவலுடன் இருக்கிறேன்.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments