28/07/2022 (517)
‘சலம் என்றால் வஞ்சனை, சபலம், சலனம், விருப்பு-வெறுப்பு என்றெல்லாம் பொருள்படுவதைப் பார்த்தோம்.
குற்றமில்லா குலத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்பவர், வஞ்சனையால், சபலத்தால் சால்பு இல்லா செயல்களை, அதாவது, கீழானச் செயல்களைச் செய்யமாட்டார்.
“சலம்பற்றிச் சால்பில செய்யார் மாசற்ற
குலம்பற்றி வாழ்தும் என்பார்.”---குறள் 956; அதிகாரம் – குடிமை
மாசு அற்ற குலம் பற்றி வாழ்தும் என்பார் = குற்றமில்லாக் குலத்தில் வாழ்கிறேன் என்று சொல்பவர்கள்; சலம்பற்றிச் சால்பில செய்யார் = வஞ்சனை எண்ணம் கொண்டு கீழானச் செயல்களைச் செய்யார்.
கோடி கொடுத்தாலும், வறுமையே வந்தாலும், சலம் பற்றி சால்பு இல்லாத செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று கடந்த மூன்று குறள்களின் (954, 955, 956) மூலம் எடுத்துச் சொன்னார் நம் பேராசான்.
சலம் என்ற சொல்லை இரண்டு இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.
மற்றுமோர் இடம் வினைத்தூய்மை என்ற 66ஆவது அதிகாரத்தின் முடிவுரையாக உள்ள குறளில் சொல்கிறார்.
அதாவது, வஞ்சனையால் பொருளைச் சேர்த்து அதனைக் காப்பாற்றுதல் என்பது பச்சை மண்ணில் பானை செய்து அதனுள் நீரினை உற்றி காப்பாற்றுவது போலவாம்!
“சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று.” --- குறள் 660; அதிகாரம் – வினைத்தூய்மை
சலத்தால் பொருள் செய்து = பிறரை ஏமாற்றி பொருள் சேர்த்து;
ஏமார்த்தல் = ஏமம் + ஆர்த்தல்; ஏமம் = பாதுகாப்பு; ஆர்த்தல் = மறைத்தல், மின்னுதல், ஓங்கி ஒலித்தல்;
ஏமார்த்தல் = பத்திரமாக மறைத்து வைத்தல்:
பசுமண் கலத்துள் நீர் பெய்து இரீஇ அற்று = பச்சை மண்குடத்தில் நீரை விட்டு பத்திரமாக இருக்கும் என்பதைப் போல.
பிறரை ஏமாற்றி பொருள் சேர்த்து பத்திரமாக மறைத்து வைத்தல், பச்சை மண்குடத்தில் நீரை விட்டு பத்திரமாக இருக்கும் என்பதைப் போல!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
ஏமார்த்தல் = ஏமம் + ஆர்த்தல்; ஏமம் = பாதுகாப்பு; ஆர்த்தல் = மறைத்தல் - நல்ல விளக்கம் !!