27/07/2022 (516)
திருமுறை என்றால் உயர்ந்த நூல் என்று பொருள். சைவ சமயத்தில் அருளாளர்கள் பாடிய பாடல்களை பன்னிரு திருமுறைகளாக வகுத்துள்ளார்கள். முதல் ஏழு திருமுறைகள் ‘தேவாரம்’ என்று அழைக்கப் படுகிறது.
முதல் மூன்று, திருஞானசம்பந்தசுவாமிகளால் பாடப்பெற்றது.
நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள் அப்பர் சுவாமிகள் என்று அழைக்கப் பெறும் திருநாவுக்கரசர் பெருமானால் பாடப் பெற்றவை.
ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி சுவாமிகளால் அருளப்பட்டவை.
நான்காம் திருமுறையில் 11 ஆவது பதிகத்தில் ஆறாவது பாடல்:
“சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாடொறு நல்குவான் அலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.” --- பாடல் 4.011.06; திருநாவுக்கரசப் பெருமான்
பெரும்பாலானவர்கள் அறிந்த “சொற்றுணை வேதியன் …” எனத் தொடங்கும் பதிகத்தில் இருக்கும் ஆறாவது பாடல்தான் இது.
பதிகம் என்றால் பத்துப் பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. எண்ணிக்கை முன்னே, பின்ன இருக்கலாமாம்.
சரி, இப்போ இது எதற்குன்னு கேட்கறீங்க? அதாங்க, முதல் வார்த்தை ‘சலமிலன்’ என்றால் என்னன்னு தெரிஞ்சுக்கத்தான்!
சலம் என்றால் சஞ்சலம், சபலம், விருப்பு – வெறுப்பு, வஞ்சனை. சலமிலன் என்றால் விருப்பு, வெறுப்பு அற்றவன்.
சலமிலன் சங்கரன் = விருப்பு-வெறுப்பற்ற பரம்பொருள்;
சார்ந்தவர்க்கு அலால் நலம் இலன்= சார்ந்தவர்க்கு அல்லால் நலம் இலன்.
இதற்கு என்ன பொருள்?
இறைவனை சார்ந்தவர்க்கு அல்லால் அவன் நலங்களை அளிக்க மாட்டான் என்று பொருள் காண முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது. ஏன் என்றால் அவன் ‘சலமிலன்’ என்று தொடங்குகிறார்.
அப்போ, என்னதான் பொருள்? சார்ந்தவர்க்கு என்பதற்கு நல் வழியைச் சார்ந்தவர்க்கு என்று பொருள் எடுத்தால்தான் சரியாக அமைகிறது. அடுத்து வரும் வரிகளுக்கும் பொருந்திவருகிறது.
நாடொறு நல்குவான் அலன் = நாள் தோறும் நல்குவான் அலன். தினந்தோறும் சும்மா, சும்மா அள்ளிக் கொடுக்க மாட்டான். அதாவது, தினமும் கும்பிடு போடுவதால் அள்ளிக் கொடுப்பானா என்றால் இல்லை.
அப்போ, என்னதான் சொல்ல வருகிறார் அப்பர்பிரான்?
“குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் நலம் மிகக்கொடுப்பது நமச்சிவாயவே” – அதாவது நல்ல குலத்திலே வழித்தோன்றலாக தோன்றும் வாய்ப்பு இல்லை என்றாலும் கவலைப் படவேண்டாம். நல்ல வழிகளில் தன்னை உயர்த்திக் கொண்டால் அதுவும் ஒரு நல்ல குலமாகும். அந்த குலமும் உயர்வு அடைய இறை எனும் இயற்கை உதவும்.
நல் வழியில் சென்றால் ‘குலம் தரும்’ என்று அருளாளர்கள் அனைவருமே அழுத்திச் சொல்கிறார்கள்.
சலத்தைப் பற்றினால் என்ன ஆகும்? வள்ளுவப் பெருமான் சொல்வதை நாளை பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments