08/05/2023 (795)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
செயல்கள் என்றால் ஏதோ வரிந்துக் கட்டிக்கொண்டு செய்பவைகள்தாம் என்று எண்ண வேண்டாம். கையைக் கட்டிக் கொண்டிருப்பதும் செயல்களில் அடங்கும்!
செயல்கள் மூன்று விதம். அவையாவன: உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள்; ஊறப்போட்டுச் செய்ய வேண்டிய செயல்கள்; நாம் ஏதும் செய்யாமல் விட்டாலேபோதும், அதுவாகவே நிகழும் செயல்கள்.
காலம் என்பது ஒரு முக்கியமான ஊடகம். வாழைக்காய் இனிப்பாக மாற என்ன செய்ய வேண்டும்? சற்று காலம் பொறுக்க வேண்டும். அவ்வளவே.
கால மாற்றங்கள் இரசவாதங்களை நிகழ்த்தும்.
அந்த அந்த வழியில் சென்றால்தான் விளைவுகள் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
வினை செயல்வகையில் முதல் குறளாக முடிவு எடுத்துவிட்டால் செயல்தான் என்றார். இரண்டாம் குறளில் தள்ளிப்போட்டுச் செய்ய வேண்டியதை தள்ளிப் போட்டும், உடனடியாகச் செய்ய வேண்டியதை உடனேயும் செய்க என்று தெளிவுபடுத்துகிறார். தள்ளிப்போடுவதில் வினைகளைச் செய்யாமல் விடுவதும் அடங்கும்.
இந்த இரு குறள்கள் மூலம் அதனைத் தெளிவுபடுத்தி வினை செய்யும் திறத்தை கூறுகிறார்.
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.” --- குறள் 672; அதிகாரம் – வினை செயல்வகை
தூங்கிச் செயற்பால தூங்குக = தள்ளிப் போட்டுச் செய்யவேண்டிய செயல்களைத் தள்ளிப்போட்டுச் செய்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க = காலம் தாழ்த்தாது செய்ய வேண்டிய செயல்களைக் காலம் தாழ்த்தாது செய்க.
செய்ய வேண்டிய செயல்களுள், தள்ளிப்போட்டுச் செய்யவேண்டியனவற்றை தள்ளிப்போட்டுச் செய்க; காலம் தாழ்த்தாது செய்ய வேண்டியவைகளை காலம் தாழ்த்தாது செய்க.
இறைமாட்சி என்னும் அதிகாரத்தின் மூன்றாவது குறளில் தூங்காமை வேண்டும் என்றார். தூங்காமை என்பதற்கு விரைவுடைமை என்பது பொருளாம். அப் பொருளைப் பகுத்து இங்கே தெளிவுபடுத்தியுள்ளாரம் வள்ளுவப் பெருந்தகை.
அந்தக் குறளையும் பார்ப்போம்.
“தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன் ஆள் பவர்க்கு.” --- குறள் 383; அதிகாரம் – இறைமாட்சி
நிலன் ஆள்பவர்க்கு = நிலத்தினை ஆளும் திறம் உடையவர்களுக்கு; தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா = செயல்களில் விரைவுடைமை, அச் செயல்களைச் செய்ய ஆழ்ந்த அறிவு, செயல்களைச் செய்து முடிக்கத் துணிவுடைமை என்ற இந்த மூன்று பண்புகளும் ஒருபோதும் நீங்கா.
நீங்கா = நீங்காமல் நிலைத்து நிற்கும்.
நிலத்தினை ஆளும் திறம் உடையவர்களுக்குச் செயல்களில் விரைவுடைமை, அச் செயல்களைச் செய்ய ஆழ்ந்த அறிவு, செயல்களைச் செய்து முடிக்கத் துணிவுடைமை என்ற இந்த மூன்று பண்புகளும் ஒருபோதும் நீங்கா.
தூங்காமை என்பதனுள் தூங்குவதும் அடங்கும் என்கிறார் குறள் 672 இன் மூலம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments