25/06/2022 (484)
ஒருத்தனுக்கு கண் இருந்தும் பார்க்க முடியலை; காது இருந்தும் கேட்கமுடியலை; வாய் இருந்தும் பேச முடியலை; மூக்கு இருந்தும் நுகர முடியலைன்னா?
ஒன்று: அவன் துஞ்சிட்டு, அதாவது தூங்கிட்டு இருக்கனும். இல்லையென்றால்? அவன் இந்த உலகத்தைவிட்டு கிளம்பியிருக்கனும், அதாவது செத்துப்போய் இருக்கனும் அவ்வளவுதான்.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.” --- குறள் 339; அதிகாரம் – நிலையாமை
நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால், இறப்பு, இறப்பு என்று ரொம்பவே பயப்படுகிறீர்களே (fear of death) அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. எப்படி, ஒவ்வொரு நாளும் நாம தூங்குவது போலத்தான் இறப்பு என்பது. அதுபோலவே, பிறப்பு என்பது நாம் காலையில் கண் விழிப்பது என்கிறார்.
இறப்பும், பிறப்பும் உயிர்களுக்கு மாறி, மாறிவரும். அழியாதது (Immortal) என்று எதுவும் கிடையாதுன்னு என்பதை எடுத்துச் சொல்லி, நிலையாமையை விளக்குகிறார். ரொம்பவே முக்கியமான அதிகாரம் இது. எந்த அதிகாரம் படிக்கவில்லை என்றாலும் இந்த அதிகாரத்தைப் படித்தால் வாழ்வில் தெளிவு பெறலாம் என்றார் ஆசிரியர். இதை பிறகு பார்க்கலாம் என்பதால் சற்று பொறுப்போம்.
நாம் ஆரம்பித்த இடத்துக்கு வருவோம்.
துஞ்சுகிறவனுக்கும், செத்தவனுக்கும் உள்ள வேறுபாடு என்னன்னு கேட்டால், தூங்குகிறவனுக்கு உயிர் இருக்கும், அதாவது மூச்சு போய் வந்துட்டு இருக்கும். செத்தவனுக்கு அது இருக்காது. இரண்டு பேருக்கும் உணர்வு இருக்காது.
நஞ்சினைக் குடித்தால், அதாவது விஷம் (poison) குடித்தால் என்ன ஆகும்? யாரும் கண்டுக்கவில்லை என்றால் ஆட்டம் அவ்வளவுதான். ஆள் காலி. உயிர் இருக்காது. நஞ்சினைக் குடித்த பின்பு அவனுக்கும் அவனைச்சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாது.
சரி, என்ன இன்றைக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் போகுதேன்னு பார்க்கறீங்களா? இதோ வருகிறேன். கள்ளுண்பவனுக்கும் அதே நிலைதான்னு நான் சொல்லலை. நம்ம பேராசான் சொல்கிறார்.
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” --- குறள் 926; அதிகாரம் – கள்ளுண்ணாமை
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் = இரண்டு பேருக்கும் அறிவு ஒடுங்கி இருப்பதால், தூங்குகிறவனும் இறந்தவனும் ஒன்றுதான்; எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர் = அது போல, இரண்டு பேரும் மயங்கி இருப்பதால், எல்லாநாளும், கள்ளுண்பவனும், நஞ்சுண்டவனும் ஒன்றுதான். அதாவது, அறிவுகெட்டு இருப்பதால்!
நம்மாளு: இரண்டு விஷயம் புரியுது சார். ஒன்னு: சரக்கு அடிப்பவன் செத்த பிணத்துக்கு சமம். எந்தப் பிரயோசனமும் இல்லை. இரண்டு: சரக்கு தெய்வத்திற்கு சமம் சார்!
ஆசிரியர்: ???
நம்மாளு: தெய்வம் நின்னு கொல்லும் சார். அதுபோல, சரக்கு வைச்சு செய்யும். நிதானமா ஒருத்தனைக் காலி பண்ணும். விஷம் வந்து ராஜா மாதிரி. உடனே காலி பண்ணிடும். சரியா சார் நான் சொல்றது?
ஆசிரியர்: ம்ம்… கிளம்புங்க. ஒழுங்கா வீட்டுக்கு போங்க. நேரமாகிட்டுது. நாளைக்கு பார்க்கலாம்!
நம்மாளு: ஐயா உங்க பேச்சுகளைக் கேட்ட பிறகு, நான் இப்பல்லாம் நேரா வீட்டுக்குத்தான் போகிறேன். நன்றி ஐயா, நாளைக்கு பார்க்கலாம்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments