30/03/2024 (1120)
அன்பிற்கினியவர்களுக்கு:
தோழி: என்ன அவர் கொடியவரா? அதையும் நீயே சொல்கிறாயா?
அவள்: அவர் இழைப்பன கொடிய செயல்கள்தாம். இருப்பினும், அவரைக் கொடியவர் என்று சொல்ல என் மனம் ஒப்பவில்லை. ஊரார் அவரைக் கொடியார் என்று சொல்வார்களே என்பதுதான் எனது எண்ண ஓட்டம். நீ அந்தப் பாடலைக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும்! நான் கொடியார் என்ற சொல்லைத்தான் பயன்படுத்தியுள்ளேன்! வேண்டுமானால், மீண்டும் ஒரு முறை படித்துப்பார்.
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். – 1235; உறுப்பு நலன் அழிதல்
சரி, மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்துகிறேன்.
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. - 1236; - உறுப்பு நலன் அழிதல்
தொடியொடு தோள் நெகிழ நோவல் = வளைகள் நழுவ, இந்தத் தோள்கள் தம் அனைத்து அழகையும் இழந்து மெலிந்து என்னை வேதனைக்கு உள்ளாக்குவதனையும் காணும் இவ்வூரார்; நொந்து அவரைக் கொடியர் எனக் கூறல் = தம் மனம் நோந்து அவரைக் கொடியவர் என்று கூறிவிடுவார்களோ?
வளைகள் நழுவ, இந்தத் தோள்கள் தம் அனைத்து அழகையும் இழந்து மெலிந்து என்னை வேதனைக்கு உள்ளாக்குவதனையும் காணும் இவ்வூரார், தம் மனம் நோந்து அவரைக் கொடியவர் என்று கூறிவிடுவார்களோ?
எனக்கிருக்கும் வேதனைகளை மறைக்க முயன்று நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன் என்கிறாள்.
வாடும் என் தோள்களின் நிலையையும், அதன் காரணமாக நம்மைச் சுற்றியிருப்பவர்கள் அவரைக் கொடியவர் என்று சொல்லும் முன்னே, என் நெஞ்சே நீ சென்று என் நிலையை அவர்க்கு உணர்த்தாயோ?
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து. – 1237; உறுப்பு நலன் அழிதல்
பாடு = பெருமை, உயர்வு, அனுபவம்;
வாடு தோட் பூசல் உரைத்து = மெலிந்திருக்கும் தோள்களைக் கண்டும் நான் படும்பாட்டைக் கண்டும்; கொடியார்க்கென் = நம்மைச் சுற்றியிருப்பவர்கள், அந்தக் கொடியார்க்கு என்ன ஆயிற்று என்று கேட்டாலும் கேட்பார்கள்; நெஞ்சே பாடு பெறுதியோ = அப்படி அவர்கள் கேட்பதற்கு முன் நெஞ்சே, நீ, அவரிடம் சென்று, சொல்லும் வகையில் சொல்லி, அவரை திரும்ப அழைத்துவருவதனால் உயர்வை அடையாயோ?
மெலிந்திருக்கும் தோள்களைக் கண்டும், நான் படும்பாட்டைக் கண்டும், நம்மைச் சுற்றியிருப்பவர்கள், அந்தக் கொடியார்க்கு என்ன ஆயிற்று என்று கேட்டாலும் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்பதற்கு முன் நெஞ்சே, நீ, அவரிடம் சென்று, சொல்லும் வகையில் சொல்லி, அவரைத் திரும்ப அழைத்துவருவதனால் உயர்வை அடையாயோ?
நெஞ்சே, நீ அப்படிச் செய்ய முடியுமானால் உன்னைவிட எனக்குப் பெரிய துணையில்லை! என்கிறாள்.
மேற்கண்ட குறளுக்கு, அறிஞர் பெருமக்கள் சிலரின் உரைகளைப் பார்ப்போம்.
சாமி சிதம்பரனார்: மனமே, கொடியரான என் காதலர்க்கு எனது மெலிகின்ற தோளால் உண்டாகும் ஆரவாரத்தைச் சொல்லி அதனால் ஒரு பெருமையை அடைவாயோ?
கலைஞர் மு. கருணாநிதி: நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?
மணக்குடவர் பெருமான்: நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.
ஒவ்வொரு உரையும் அருமையாகவும் அழகாகவும் இருக்கின்றன. காமத்துப்பாலின் பாடல்கள் கற்பனை ஊற்று. தோண்டத் தோண்ட சுவையான நீர் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
ஏழு சீர்தான்! எண்ணாயிரம் எண்ணங்களைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள ஒரு சிறப்பான நூல் நம் திருக்குறள். வாழ்கையின் அனைத்து நிலைகளையும் ஒரே நூலில் வடித்திருப்பது இதன் சிறப்பு. அதுவும், பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. இது போன்று வேறு ஒரு நூல் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments