07/10/2022 (585)
தொடி என்றால் ஒரு அளவை. இதை ஏற்கனவே பார்த்துள்ளோம். தொடி என்றால் ஒரு பலம், அதாவது 41.6 gm. காண்க: 21/01/2022 (330)
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.” --- குறள் 1037; அதிகாரம் – உழவு
ஒன்றை நான்காக உழுதால் பிடி எருகூட இல்லாமல் விளையுமாம். உழுதலின் முக்கியத்தைச் சொன்னார்.
தொடி என்றால் பெண்கள் அணியும் வளையல் என்றும் பொருள். நம்பேராசானுக்கு பிடித்த அணிகலன். தொடியில் பலவகை என்கிறார். நாம் பல குறள்களில் பார்த்துள்ளோம். காண்க: 19/02/2022 (358), 20/02/2022 (359), 09/06/2022 (468).
“கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.” --- குறள் 1101; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
“செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.” --- குறள் 1275; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
“அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.” --- குறள் 911; அதிகாரம் – வரைவின் மகளிர்
ஒண்தொடி – ஒளி பொருந்திய வளையல், ஆய்தொடி – அழகான வளையல், செறிதொடி – நிறைய வளையல்கள்/கனத்த வளையல்,
இப்போது ‘குறுந்தொடி’ அதாவது ‘மெல்லிய வளையல்’ என்பதை பயன்படுத்துகிறார்.
‘தொடல்’ என்றால் தொடுவது என்று நமக்குத் தெரியும். ‘தொடல்’ என்றால் ‘தொடர்’ என்றும் ‘சங்கிலி’ என்றும் பொருள் இருக்காம்!
‘தொடலை’ என்றால் தொடுத்துக் கட்டுவது. அதாவது ‘மாலை’ என்ற பொருளாம்!
“தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலோடு
மாலை உழக்கும் துயர்.” --- குறள் 1135; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
அந்த மெல்லிய வளைகளை அணிந்தவளின் மேல் நான் கொண்ட காதலினால் அவள் தந்த பரிசுகள் என்னென்ன தெரியுமா?
காம நோய், பனை ஓலை குதிரை சவாரி, இந்த அலங்கோல மாலை…
குறுந்தொடி தந்தாள் = மெல்லிய வளையல்களை அணிந்தவள் தந்தாள்; மாலை உழக்கும் துயர் = காமம்; மடலோடு தொடலை = இந்த பனை ஓலை குதிரையோடு, இந்த எருக்கம்பூ மாலையையும்
அதாவது காதலில் விழுந்தவர்களின் நிலை எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார் நம் பேராசான்.
இப்போது பனை ஓலை குதிரைகள் இல்லை, அதனால் பனை ஓலைகளைப்போல தாடி வளர்த்துக் கொள்கிறார்கள்!
பி.கு: ‘தொடலைக் குறுந்தொடி’ என்பதற்கு மாலை போன்று மெல்லிய வளையல்களை அணிந்தவள் என்று பல அறிஞர் பெருமக்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments