04/10/2021 (223)
நேற்று, தூது எனும் அதிகாரத்தின் முதல் குறள் பார்த்தோம். தூதுவனுக்கு, தனது சுற்றத்திடையே அன்பு இருக்க வேண்டும், குறையில்லா குடும்பம் அமையப் பெற்று இருக்க வேண்டும், மேலும் தலைமையே விரும்பும்படி அவன் அமைந்திருக்க இருக்க வேண்டும் போன்றவை பண்புகள் என்று பார்த்தோம்.
வகுத்துரைப்பார், வழியுரைப்பார் என தூதுவர்கள் இரு பிரிவாக இருக்கலாம் என்பதையும் பார்த்தோம். இருவருக்குமே தேவையான பண்புகளை முதல் இரு குறள்களிலே (681 & 682) தொகுத்துள்ளார்.
தொடர்கிறார் நம் பேராசான். மேலும், மூன்று இன்றியமையாப் பண்புகள் வேண்டும் என்கிறார்.
681வது குறள் அடிப்படைத் தகுதிகளைக் (basic qualifications) குறிக்கிறது. 682வது குறள் இன்றியமையாத் தகுதிகளை (essential qualifications) விளக்குகிறது.
மீண்டும், குறள் 682ல், அன்பு என்றே தொடங்குகிறார். அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல் வன்மை ஆகிய மூன்றும் இன்றியமையாப் பண்புகளாம்.
உணர்ச்சி அதிகமானால் அறிவு மங்கிப் போகும்; அறிவு அதிகமானால் உணர்ச்சிகள் புறந்தள்ளப்படும். சரியான விகிதத்திலே கலந்து இருப்பது தூதுக்கு சிறப்பு. இரண்டில் ஒன்று தூக்கலாக இருப்பின் வெளிவரும் சொற்கள் மாறுபடலாம். எதை எப்படிச் சொன்னால் நன்மை பயக்கும் என்பதை ஆராய்ந்து சொல்ல அன்பும், அறிவும் தக்க விகிதத்தில் கலந்து இருக்க வேண்டும்.
குறளுக்கு வருவோம்.
“அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.” --- குறள் 682; அதிகாரம் - தூது
பல பெரும் உரையாசிரியர்கள், 681வது குறளில் வரும் அன்பிற்கு சுற்றத்திடையே அன்பு என்றும், 682வது குறளில் வரும் அன்பிற்கு அரசனிடம் அன்பு என்றும் பொருள் வேறுபாடு கண்டுள்ளார்கள்.
அடுத்துவரும், நான்கு குறள்களில் வகுத்துரைப்பானுக்கு தேவையான சிறப்புத் தகுதிகளை (special qualification) விளக்கப் போகிறார். நாமும் பின் தொடர்வோம்.
பாருங்க என்ன ஒரு முறைமை! அடிப்படைத் தகுதிகள், இன்றியமையாத் தகுதிகள், சிறப்புத் தகுதிகள் (Basic Qualifications, Essential qualifications, Special Qualifications … ). ஒரு வேலைக்கு ஆள் எடுக்கனும்ன்னா நம்ம பேராசானைத் தான் கேட்கனும். புட்டு, புட்டு வைக்கிறார். லட்டு மாதிரி நாம எடுத்துக்க வேண்டியதுதான்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments